திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read

 திரைத்துறைக்கு வந்த புதிதில் தாம் சில தவறுகளைச் செய்ததாகச் சொல்கிறார் நடிகை டாப்சி. குறிப்பாக, கதைகளைத் தேர்வு செய்வதில் தான் அதிக தவறுகள் ஏற்பட்ட தாகக் கூறியுள்ளார்.

"தமிழிலும் தெலுங்கிலும் நடிக்கத் தொடங்கியபோது, வணிக படங்கள்தான் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என்று நினைத்து அதுபோன்ற படங்களைத் தேர்வு செய்து நடித்தேன். அதுதான் நான் செய்த முதல் தவறு. அதன் பிறகு நான் என்ன மாதிரி படங்களைப் பார்க்க விரும்புகிறேனோ, அதே போன்ற கதைகளைத் தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன். அது எனக்குச் சாதகமாக அமைந்தது.

"ஆனாலும் ஒரு ரசிகையின் பார்வையில் இருந்து நான் மாறவில்லை. கதை கேட்கும்போது நடிகையாக கேட்காமல், பார்வையாளராகவே கேட்பேன். அதன் பிறகு நடிப்பது குறித்து முடிவெடுக்கிறேன். தமிழ், தெலுங்கில் ஆண்டுக்கு ஒரு படம் நடிக்க விரும்புகிறேன்," என்கிறார் டாப்சி.

 இயக்குநர் சங்கரின் மகளைத் தொடர்ந்து அவரது மகன் ஆர்ஜித்தும் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமாகிறார். சங்கரின் இரண்டாவது மகள் அதிதி தற்போது கார்த்தி நாயகனாக நடிக்கும் 'விருமன்' படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவரது சகோதரர் ஆர்ஜித்தும் திரையுலகில் கால்பதிக்கிறார். அவர் யாருடைய இயக்கத்தில் நடிக்கிறார் என்பது விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.

 நடிகர் கார்த்தி அடுத்து 'பேச்சுலர்' படத்தின் இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிக்க உள்ளார். தற்போது முத்தையா இயக்கத்தில் 'விருமன்', பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் 'சர்தார்' படங்களில் நடித்து வருகிறார் கார்த்தி. 'பேச்சுலர்' படத்தில் காதலுக்கும் நம்பிக்கைக்கும் இடையே உள்ள வித்தி யாசத்தை அழகாக காட்சிப்படுத்தி இருந்தார் சதீஷ் செல்வகுமார். அதனால் கவரப்பட்ட கார்த்தி, அண்மையில் அவரை அழைத்து கதை கேட்டுள்ளார். அந்தக் கதை பிடித்துப்போகவே கால்ஷீட் ஒதுக்கி உள்ளதாகத் தகவல்.

 தங்களது குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் என்று கூறி சிலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக நடிகர் சாந்தனு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, திரையுலகைச் சேர்ந்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

"யாரேனும் எங்களுக்கு நெருக்கமானவர்கள் என்று கூறிக்கொண்டு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். அந்த மோசடிக்காரர்களை நம்பவேண்டாம். எங்களிடம் விவரங்களைத் தெரியப்படுத்தி தெளிவுபெறுங்கள்," என்று சாந்தனுவும் அவரது மனைவி கீர்த்தியும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

 அல்லு அர்ஜுன், ராஷ்மிகா இணைந்து நடித்துள்ள 'புஷ்பா' படம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. இந்நிலையில், இந்தியில் மட்டும் அப்படம் நூறு கோடி ரூபாய் வசூல் கண்டுள்ளது.

 தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்றியிருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் பங்கேற்க இருந்த படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது.