தி.கிட்டு இயக்கத்தில் உருவாகி வருகிறது 'சல்லியர்கள்'. இவரது முதல் படம் 'மேதகு' ஏற்படுத்திய பரபரப்பும் அப்போது எழுந்த வாக்குவாதங்களும் அனைவருக்கும் தெரியும்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தொடக்க கால வரலாற்றை தன் படைப்பில் அழுத்தமாகப் பதிவு செய்திருந்தார் கிட்டு.
"உண்மையான வரலாற்றைத் திரைப்படம் மூலம் சொன்னால் சாதி, மதத்தால் பிரிந்துகிடக்கும் தமிழர்களை ஒன்றுகூட்ட வாய்ப்பிருக்கிறது. ஈழப்போராட்டம் பற்றிய எவ்வளவோ உண்மைகள் மீதமிருக்கின்றன. கசப்பான உண்மைகள் இன்னும் மறைந்து கிடக்கின்றன. அதை உணர்ந்து உருவாக்கப்படு கிறது 'சல்லியர்கள்' படம்," என்கிறார் கிட்டு.
இதுவும் ஈழம் தொடர்பான திரைப்படம்தானாம். போர் முனையில் ஏராளமான தமிழர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களின் அனுபவங்களைக் காட்சிப்படுத்தி உள்ளார்.
"அச்சமயம், எத்தகைய சமரசங்களுக்கும் இடமளிக்காமல் களத்தில் நின்று பல மருத்துவர்கள் துணிச்சலுடன் பணியாற்றினர்.போர் நடக்கும் இடத்திற்குக் கொஞ்சம் தள்ளி பதுங்குகுழி மருத்துவமனை இருக்கும். சிறிய பகுதியில் எல்லா வசதிகளும் கொண்டு அந்தப் போர்ச்சூழலிலும் இயங்கிக் கொண்டிருக்கும். அந்தப் பதுங்குகுழி மருத்துவமனையின் பரபரப்பு நிமிடங்கள் இதில் பதிவாகியிருக்கின்றன.
"பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ராஜேந்திர சோழன் படைப் பிரிவில் போர் மருத்துவப் பிரிவும் இருந்துள்ளது. நெஞ்சில் குத்துப்பட்ட ஈட்டி முனைகளைப் பறித்து, தையல் போட்டு மருத்துவப் பணி ஆற்றியவர்களை 'சல்லிய கிரியை செய்பவர்கள்' என்று அழைத்திருக்கிறார்கள். அந்தப் பணியைச் செய்தவர்களைச் 'சல்லியன் மருத்துவன்' என்று அழைத்ததாகக் கல்வெட்டுகளில் தகவல்கள் இருக்கின்றன. அதை வைத்துதான் 'சல்லியர்கள்' என தலைப்பு வைத்தோம்," என்கிறார் கிட்டு.

