காதல் குறித்தும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் வெளிப்படையாக தகவல்களைப் பகிர்ந்துகொள்வதில் தமக்கு விருப்பம் இல்லை என்கிறார் இளம் நாயகி நிதி அகர்வால். அண்மைய பேட்டியில், இன்றைய தேதியில் உலகம் உள்ள சூழ்நிலையில் எதையும் திட்டமிட்டு மேற்கொள்ள இயலாது என்கிறார்.
காரணம், நாம் ஒரு திட்டத்தை வகுத்து அதை செயல்படுத்த முயல்வதற்குள் உலகம் தலைகீழாக மாறிவிடுகிறது என்று கொரோனா விவகாரத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.
"நானும் ஒரு முன்னணி நடிகரும் காதல்வயப்பட்டிருப்பதாக கூறுகிறார்கள். அது குறித்து என்னிடம் சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவற்றுக்குப் பதில் அளிக்க விரும்பவில்லை.
"காதல், திருமணம், குடும்பம் ஆகியவை எல்லாம் ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அது குறித்து வெளிப்படையாக விவாதிக்கவும் பகிர்ந்துகொள்ளவும் எதுவும் இல்லை," என்று திட்டவட்டமாகச் சொல்கிறார் நிதி அகர்வால்.
தற்போது தமிழில் மகிழ்திருமேனி இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் படத்தில் நிதி தான் நாயகி.
படத்தின் கதை குறித்து தம்மால் எதுவும் தெரிவிக்க இயலாது என்றாலும், இந்தப் படம் தனது திரைப்பயணத்தில் முக்கியமான படைப்பாக இருக்கும் என்பதில் மட்டும் தமக்கும் சந்தேகமே இல்லை என்கிறார்.
"நான் நடித்துள்ள இரண்டு தமிழ் படங்களிலுமே ('ஈஸ்வரன்', 'பூமி') எனக்கான பகுதி மிகக்குறைவுதான். அதிகபட்சம், பத்து பதினைந்து நிமிடங்கள்தான் திரையில் தோன்றி இருப்பேன்.
"ஆனால், மகிழ்திருமேனி எனக்கு ஏற்ற ஒரு கதாபாத்திரத்தை அமைத்திருப்பதுடன், படம் நெடுகிலும் என்னை இடம்பெறச் செய்துள்ளார். இந்தப் படம் குறித்த எதிர்பார்ப்பு கோடம்பாக்கத்தில் அதிகரித்து வருவதாக அறிகிறேன். இந்த ஆண்டு எனது நடிப்பில் குறைந்தபட்சம் ஆறு படங்களாவது வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
"நான் திடீரென மாயமாகிவிட்டதாக தமிழ் ரசிகர்கள் கூறுகின்றனர் என்று ஊடகங்களில் படித்தேன். திரையுலகம் என்றால் இப்படித்தான் இருக்கும்.
"நான் நடித்த இரண்டு தமிழ் படங்களும் ஒரே தேதியில் வெளியீடு கண்டன. அதன் பிறகு தெலுங்கில் ஒப்புக்கொண்ட படங்களில் நடித்துவிட்டு மீண்டும் தமிழுக்கு வந்துள்ளேன். சிறு இடைவெளி ரசிகர்களை இவ்வாறு பேச வைத்துள்ளது," என்கிறார் நிதி அகர்வால்.

