'அண்ணாத்த' படத்தில் ரஜினிகாந்துடன் நடிக்க வேண்டும் என்பதற்காக இரு பெரிய வாய்ப்புகளைக் கைவிட்டுள்ளார் கீர்த்தி சுரேஷ்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் முக்கிய வேடத்தில் கீர்த்தி நடிப்பதாக இருந்தது. அதேபோல் 'ஷியாம் சிங்கா ராய்' தெலுங்குப் படத்திலும் சாய் பல்லவி ஏற்றிருந்த வேடத்தில் கீர்த்தியைத்தான் முதலில் ஒப்பந்தம் செய்யத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தேடி வந்த இரு வாய்ப்புகளையும் வேண்டாம் என்றும் மறுத்துவிட்டார் கீர்த்தி.
இந்நிலையில், 'ஷியாம் சிங்கா ராய்' பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. எனினும், வாய்ப்புகளை மறுத்ததற்காக தாம் வருத்தப்படவில்லை என்கிறாராம் கீர்த்தி.
தமிழில் எதிர்பார்த்த வாய்ப்பு அமையவில்லை என்றாலும், தாம் பொறுமை இழக்கவில்லை என்கிறார் ரித்திகா சிங். இந்நிலையில், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க உள்ள படத்தில் ரித்திகாவை நாயகியாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். அது குறித்து இவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது காதலும் நகைச்சுவையும் கலந்த படமாக உருவாக உள்ளதாம். ஏற்கெனவே, அஷ்வத் மாரிமுத்து இயக்கிய 'ஓ மை கடவுளே' பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் படத்திலும் ரித்திகா நடித்திருந்தார்.
'பிக்பாஸ்' மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த கவின், அடுத்து இணையத் தொடர் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். 'ஆகாஷ் வாணி' என்ற தலைப்பில் உருவாகும் இத்தொடரை அறிமுக இயக்குநர் ஈநாக் அபில் இயக்குகிறார். இவர் அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். இந்த இணையத்தொடரில் கவினுக்கு ஜோடியாக 'பிகில்' ரெபா மோனிகா நடிக்கிறார். முன்னதாக, 'பீஸ்ட்' படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றி இருந்தார் கவின். அதன்மூலம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகவும் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளதாகவும் இவர் கூறுகிறார்.
சதீஷ் செல்வகுமார் இயக்கும் புதுப்படத்தில் சமந்தா நாயகியாக ஒப்பந்தமாக இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் தலைப்பு வைக்கப் படாத அந்தப் படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக யாரை நடிக்க வைப்பது என்று படக்குழு ஆலோ சனை நடத்தியபோது, சமந்தா பொருத்தமாக இருப்பார் என்று முடிவானதாம். இவரது கால்ஷீட்டைப் பெறுவதற்காக தொடர்புகொண்டபோது, சாதகமான பதில் கிடைத்துள்ளது. இதையடுத்து, சமந்தா நடிப்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா கிருமித்தொற்றில் இருந்து பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் முழுமையாக குணமடைந்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் அடுத்த படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார். முன்னதாக டி.இமான் இசையமைப்பார் என்று தகவல் வெளியானது. இந்நிலையில், சிவாவுக்கும் இசையமைப்பாளர் இமானுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாகவும் அதனால்தான் ஹாரிஸ் ஜெயராஜ் ஒப்பந்தமாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இளம் பின்னணிப் பாடகர் சித் ஸ்ரீராமின் குரலில் ஏதோ மாயம் உள்ளதாகப் பாராட்டி உள்ளார் நடிகர் அல்லு அர்ஜுன்.

