கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று பிடிவாதம் பிடிக்காமல் குணச்சித்திர பாத்திரங்களையும் ஏற்று நடிக்கிறார் ரைசா வில்சன்.
திரையுலகில் நிலவும் போட்டியை எதிர்கொள்வது தமக்கு ரொம்பப் பிடிக்கும் என அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"போட்டி இல்லாத துறை என்று எதுவுமே இல்லை. போட்டிகளைச் சமாளித்தால்தான் வெற்றிகளைப் பெற முடியும். அதனால்தான் நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று சிறிய வட்டத்துக்குள் என்னை அடைத்துக்கொள்ள விரும்பவில்லை.
"ஒரே படத்தில் பத்து நாயகிகள் நடித்தாலும் கவலைப்பட மாட்டேன். என்னுடைய கதாபாத்திரம் வலுவாக உள்ளதா என்பதில் மட்டுமே எனது கவனம் இருக்கும். அதேசமயம், நாயகியா, வலுவான கதாபாத்திரமா என்று கேட்டீர்கள் எனில், எனது தேர்வு வலுவான கதாபாத்திரமாகத்தான் இருக்கும்.
"கதாநாயகி வேடம் என்பது ஒப்பனை செய்யப்பட்ட பொம்மை மாதிரியானது. வணிகப் படங்களில் நாயகியாக நடிப்பது எளிது. குணச்சித்திர வேடங்கள் அமையும்போது தம் திறமை தன்னால் வெளிப்படுகிறது.
"மேலும் நல்ல நடிகை என்ற பெயரையும் பெற்றுக் கொடுக்கும். ரசிகர்களின் பார்வையை நம் பக்கம் திருப்பும். இதுவரை இரண்டு வகை வாய்ப்புகளையும் ஏற்று நடித்து வந்திருக்கிறேன். திறமையை வெளிப்படுத்தி இருப்பதால் நாயகியை மையப்படுத்தும் படங்களில் நடிக்க ஆசை," என்கிறார் ரைசா.
விஷ்ணுவிஷால் நாயகனாக நடித்துள்ள 'எஃப்ஐஆர்' படத்தில் மொத்தம் மூன்று நாயகிகள். மூவரில் ரைசாவும் ஒருவர். கதைப்படி இஸ்லாமியப் பெண்ணாக திரையில் தோன்றுகிறார்.
"முஸ்லிம் கலாசாரம் ஏதாவது தெரியுமா அல்லது அதுகுறித்து தெரிந்துகொண்டு நடித்தீர்களா என்று கேட்கிறார்கள். சிறு வயது முதல் எனக்கு நிறைய முஸ்லிம் தோழிகள் உள்ளனர். அவர்களுடைய கலாசாரத்தைப் பார்த்து வளர்ந்தவள் நான்.
"இந்தப் படத்தில் அனிஷா குரேஷி என்ற வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். கதைப்படி அனிஷா மிகவும் துணிச்சலான பெண். அவள் விரும்பி முக்காடு அணிபவள். அது தனக்கு அழகும் கம்பீரமும் சேர்ப்பதாக நினைப்பவள். எனது தோழிகளும்கூட அனிஷாவைப் போல் கம்பீரமானவர்கள்தான். படத்தில் நாயகனுக்கும் அனிஷாவுக்கும் சண்டைக் காட்சிகள் உள்ளன. அவற்றில் 'டூப்' போடாமல் நானே நடித்துள்ளேன். என்னால் இப்படியெல்லாம் சண்டை போட முடியுமா என்று என்னைப் போலவே நீங்களும் வியப்பீர்கள்," என்கிறார் ரைசா.
தமக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் அனைத்துமே கடவுள் அளித்த பரிசு என்று குறிப்பிடுபவர், வாய்ப்புகள் குவிய வேண்டும் என்றெல்லாம் தாம் ஆசைப்படுவது இல்லை என்று பக்குவமாகப் பேசுகிறார்.
"நல்ல கதைகள் அமையும்போது நேரம் இல்லையென்றாலும் அவற்றில் எப்படியாவது நடிக்க வேண்டும் என விரும்புவேன்.
"காரணம், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 'அந்த நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமே' என்று புலம்பக்கூடாது," என்கிறார் ரைசா.
'பிக்பாஸ் அல்டிமேட்' நிகழ்ச்சியில் பங்கேற்க இவருக்கு அழைப்பு வரவில்லையாம். ஒருவேளை அழைப்பு வந்தாலும் அதை ஏற்கப் போவதில்லை என முடிவு செய்துள்ளார்.
"அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் நடந்த ஒரே நல்ல விஷயம், இயக்குநர் சேரனிடம் தமிழில் பேச கற்றுக்கொண்டேன். மற்றபடி வேறு எந்த லாபமும் இல்லை.
"மலையாளத்தில் சரளமாகப் பேசுவேன். இந்தி, என் அம்மாவின் தாய்மொழி என்பதால் இன்னும் நன்றாகப் பேசுவேன்.
"சிறு வயதில் எந்த மொழியையும் வேகமாக கற்றுக்கொள்ள முடியும். அதைத்தான் நான் செய்தேன். அது இப்போது கைகொடுக்கிறது," என்கிறார் ரைசா.