தமக்கு சட்டெனக் கோபம் வந்துவிடும் என்கிறார் இளம் நாயகி நிதி அகர்வால்.
கடந்த சில மாதங்களாக தியானம் மூலம் கோபத்தை ஓரளவு கட்டுப்படுத்தி வைத்திருப்பதாகச் சொல்கிறார்.
"முன்பெல்லாம் அன்பர் தினத்தன்று வெளியே சென்றால் பலர் வாழ்த்து அட்டைகள், ரோஜா மலர்கள் என்று ஏதாவது கொடுப்பார்கள். கோபத்தில் அவற்றை எல்லாம் தூக்கி வீசிவிடுவேன்," என்கிறார் நிதி.
பள்ளியில் ஒருவன் இவர் அழகாக இருப்பதாகச் சொல்லப்போக, கையில் இருந்த ஆப்பிளை மாணவன் மீது வீசியெறிந்தாராம்.
"இப்போது தியானம் செய்வது, சைவ உணவு மட்டுமே சாப்பிடுவது என்று பல விஷயங்களைப் பின்பற்றுவதால் கோபம் குறைந்துள்ளது. எல்லோரும் தியானம் செய்யுங்கள்," என்கிறார் நிதி அகர்வால்.
'மாநாடு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழில் விஷால் நாயகனாக நடிக்கும் 'மார்க் ஆண்டனி' என்ற படத்திலும் வில்லனாக நடிக்க உள்ளார் எஸ்.ஜே.சூர்யா. இந்தப் படத்தில் நடிப்பதற்காக அவர் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார்.
இந்நிலையில், தெலுங்குப் படம் ஒன்றில் வில்லனாக நடிக்கக் கேட்டு எஸ்.ஜே.சூர்யாவை அணுகியுள்ளனர். அவரோ ஏழு கோடி ரூபாய் சம்பளம் கேட்க, தெலுங்குத்தரப்பு அதிர்ச்சி அடைந்ததாம். எனினும் அவர் நடிக்கும் படங்கள் அனைத்துமே வெற்றிபெற்று வருவதால், வேறு வழியின்றி கேட்ட தொகை யைக் கொடுக்க முன்வந்துள்ளதாம் தயாரிப்பாளர் தரப்பு.
'மகாநதி' படத்துக்குப் பிறகு எட்டு படங்களில் நடித்து முடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். அவை அனைத்துமே வசூல் ரீதியில் தோல்வி கண்டுள்ளன.
இதையடுத்து சமூக ஊடகங்களில் ரசிகர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பிய வண்ணம் உள்ளனர்.
தோல்விகள் சலிப்பை ஏற்படுத்தவில்லையா என்று ஒரு ரசிகர் எழுப்பிய கேள்விக்கு, தமது அண்மைய புகைப்படங்களை வெளியிட்டு பதிலளித்துள்ளார் கீர்த்தி.
"எப்போதுமே திரும்பிப் பார்ப்பது இல்லை, கேமரா இருந்தால் மட்டுமே...." என்று கீர்த்தி குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புதிய படங்களில் அவர் ஓரளவு கவர்ச்சியாகவும் காட்சியளிக்கிறார்.
அண்மையில் இவரது நடிப்பில் வெளியான 'குட் லக் சகி' தெலுங்குப்படம் தோல்வி கண்டுள்ளது. மலையாளத்தில் உருவாகும் 'வாஷி', தமிழில் உருவாகும் 'சாணிக்காயிதம்' ஆகிய படங்களின் வெளியீடை ஆவலுடன் நோக்கி உள்ளாராம்.
ஹன்சிகா தமிழில் நடித்து கடைசியாக வெளியீடு கண்ட படம் '100'. அதற்கும் முன்பே 'மஹா' படத்தில் நடித்திருந்தார். சில பிரச்சினைகளால் அந்தப் படம் இதுவரை வெளியாக வில்லை.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நேரடித் தமிழ்ப் படத்தில் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
இதை 'கூகல் குட்டப்பா' படத்தை இயக்கிய சரவணன் இயக்க உள்ளார்.
சிம்பு நடித்த 'வாலு', 'சங்கத்தமிழன்', 'ஸ்கெட்ச்' உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜயசந்தர் இப்போது தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார்.
'வாலு' படத்தின் படப்பிடிப்பின்போது ஹன்சிகாவுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு, இப்போது தயாரிப்பாளர் ஆனதும் ஹன்சிகாவையே தன் பட நாயகியாக ஒப்பந்தம் செய்ய வைத்துள்ளது.

