விஜய் மகன் சஞ்சயை தமக்கு சிறு வயது முதலே தெரியும் என்கிறார் விக்ரமின் மகன் துருவ்.
காதல் கதைகளில் நடிக்க வேண்டும் என்பதே தமது விருப்பம் என்றும் பேட்டி ஒன்றில் அவர் கூறியுள்ளார்.
விக்ரமும் துருவ்வும் இணைந்து நடித்துள்ள 'மகான்' படம் நேரடியாக இணையத்தில் வெளியீடு காண்கிறது. அப்படத்தில் தமக்கு சவாலான கதாபாத்திரம் அமைந்துள்ளதாகச் சொல்கிறார் துருவ்.
"நான் அப்பாவின் தீவிர ரசிகன். அவருடன் இணைந்து நடிக்க முதலில் சிரமப்பட்டேன். பிறகு எல்லாம் இயல்பாக நடந்தது. அந்த வகையில் 'மகான்' படம் மறக்க முடியாத அனுபவம்.
"எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் நூறு விழுக்காட்டுக்கும் அதிகமாக உழைக்க வேண்டும் என்று அப்பா அடிக்கடி சொல்வார். அவருடன் நடித்தபோது அது உண்மை என்பதைப் புரிந்துகொண்டேன். எனவே 'விக்ரம் மகன் நன்றாக நடிக்கிறான்' என்ற பெயர் கிடைத்தால், அதுபோதும்.
"நடிப்பின் மீதான எனது காதலை இந்தப் படத்தில் உள்ள எனது கதாபாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளேன்," என்று சொல்லும் துருவ், இப்படத்தில் ஒரு 'ராப்' பாடலும் பாடியுள்ளார்.
தமது தந்தை நடித்த படங்களில் 'பீமா' மிகவும் பிடித்தமானது என்றும் சிறு வயது முதலே அவரது நடிப்பை ரசித்து வளர்ந்ததாகவும் கூறுகிறார்.
"சஞ்சய் (விஜய் மகன்) சினிமா குறித்து நிறைய கற்று வருகிறார். படம் இயக்கவேண்டும் என்றும் விரும்புகிறார். ஒருவேளை என்னை வைத்துப் படம் இயக்க சஞ்சய் முன்வந்தால் நிச்சயம் நடிப்பேன்," என்கிறார் துருவ்.
'பீமா' படத்தின் இரண்டாம் பாகம் உருவானால், அதில் நடிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ள துருவ், சில பிரச்சினைகள் காரணமாகவே 'மகான்' படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்றார்.