தென்னிந்தியத் திரையுலகில் முதல்நிலை நாயகியாக வலம் வரும் நயன்தாரா, மிக விரைவில் இந்தித் திரையுலகிலும் இதே உயரத்தை எட்டிப்பிடிப்பார் என்கிறார்கள் அவரை நன்கு அறிந்தவர்கள்.
இந்த 'நன்கு அறிந்தவர்கள்' பட்டியலில் இயக்குநர் அட்லீக்கு முதல் இடம் கொடுக்கலாம்.
நயன்தாராவை தனது உடன்பிறவா சகோதரியாகவே கருதுகிறார் அட்லீ. அதனால்தான் தாம் ஷாரூக் கானை வைத்து இந்தியில் இயக்கி வரும் திரைப்படத்தில் நயன்தாராவை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளார்.
நயன்தாரா கேட்ட சம்பளம், அவர் விதித்த நிபந்தனைகளால் படத்தின் தயாரிப்புத் தரப்பு கோபப்பட்டபோது, இந்தப் பிரச்சினையில் தாமே வலிய முன்வந்து இருதரப்புக்கும் இடையேயான பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்ததும் அட்லீதான். இந்நிலையில் நயன்தாராவுக்காக அவர் மிகப் பெரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
தென்னிந்தியத் திரையுலகில் 25 வயதைக் கடந்துவிட்டால் நாயகியாக அறிமுகமாவது கடினம். இந்தித் திரையுலகமோ இவ்விஷயத்தில் நேரெதிர்.
முப்பது வயதுக்கு மேற்பட்ட நாயகி களைத்தான் அங்குள்ள ரசிகர்கள் கனவுக்கன்னியாகக் கருதி கொண்டா டுகிறார்கள். அந்தக் காலத்து ஹேமமாலினி, பிறகு ஸ்ரீதேவி தொடங்கி கரீனா கபூர் வரை பல நடிகைகள் சுமார் முப்பது வயதுக்குப் பிறகுதான் இந்தியில் அறிமுகமானார்கள். புகழின் உச்சிக்கும் சென்றார்கள்.
அந்த வகையில் பார்த்தால் நயன்தாராவும் முப்பது வயதைக் கடந்துவிட்டார். எனவே அவர் இந்தித் திரையுலகில் அடியெடுத்து வைக்க இதுவே சரியான நேரம் என்று அவரிடம் கூறிஉள்ளார் அட்லீ.
அதன் பின்னர் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள்தான் நயன்தாராவை உற்சாகப்படுத்தி உள்ளதாம். உடன்பிறவா 'பாசக்கார தம்பி'க்கு அவர் இன்றுவரை நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறார்.
சரி... அப்படி என்ன செய்துவிட்டார் அட்லீ?
இந்தித் திரையுலகத்தின் தலைமையகமான மும்பையில் புதிதாக தயாரிக்கப்படும் படங்களுக்கு இந்திய அளவில் நல்ல கலைஞர்களைத் தேடிப்பிடிப்பது, கதாநாயகிகளின் சம்பளம், கால்ஷீட் ஆகியவற்றைக் கவனிப்பது, முன்னணி நடிகைகளுக்கு வாய்ப்பு தேடித்தருவது ஆகியவற்றை எல்லாம் கவனிப்பதற்கு என்றே பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
அவற்றுள் முன்னணியில் உள்ள 12 நிறுவனங்களைத் தேர்வு செய்து, அவற்றின் பிரதிநிதிகளை அழைத்து வந்து நயன்தாராவைச் சந்திக்க வைத்துள்ளார் அட்லீ.
அப்போது பல்வேறு விஷயங்கள் பேசப்பட்டன. இதையடுத்து அந்தச் சந்திப்பின் முடிவிலேயே, ஆறு இந்திப் படங்களில் நயன்தாராவை ஒப்பந்தம் செய்ய தயாராக இருப்பதாக அந்நிறுவனங்கள் கூறியுள்ளன.
இதை நம்ப முடியாத உற்சாகத்தில் உள்ளார் நயன். ஆனால், அவரது காதலர் விக்னேஷ் சிவனோ அதிர்ச்சியில் உள்ளாராம். காரணம், கைவசம் உள்ள படங்களில் நயன்தாரா நடித்து முடித்த பிறகு அடுத்த ஆண்டு முடிவதற்குள், தங்கள் திருமணத்தை நடத்தி முடிக்கவேண்டும் என விரும்புகிறாராம் விக்னேஷ்.
இந்நேரம் பார்த்து அட்லீ செய்த வேலையால், நயன்தாராவின் பார்வை மீண்டும் திரையுலகம், முதல்நிலை நடிகை ஆகியவற்றின் மீது பதிந்துள்ளது. இதற்கிடையே, இந்தி இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் விக்னேஷ் சிவனிடம்தான் கதை சொல்லி, தமது கால்ஷீட்டைப் பெற வேண்டும் என்றும் இதில் தமது காதலரின் முடிவே இறுதியானது என்றும் மும்பை நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளாராம் நயன்.
இதற்கிடையே, 'பாகுபலி' படத்தில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ராஜமாதா சிவகாமி என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து புதுப்படம் ஒன்று தயாராகிறது. தெலுங்கில் இந்த வேடத்தில் ரம்யா கிருஷ்ணன் கம்பீரமாக நடித்திருப்பார்.
இந்நிலையில், புதுப் படத்துக்காக இளம் வயது 'சிவகாமி'யாக நடிக்கக் கேட்டு நயன்தாராவை அணுகியுள்ளது முன்னணி ஓடிடி நிறுவனம் ஒன்று.
'இது நல்ல முயற்சியாக இருக்கிறதே' என்று முதலில் உற்சாகமடைந்த நயன்தாரா, பின்னர் தம்மால் இந்தப் படத்தில் நடிக்கமுடியாது என்று கூறிவிட்டாராம்.
இதையடுத்து வேறு நடிகையை வைத்து பட வேலைகளைத் தொடங்கியது அந்நிறுவனம். பல கோடி ரூபாய் செலவில் முதற்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.
ராஜமவுலியின் இணை இயக்குநர்தான் 'சிவகாமி' படத்தை இயக்கி உள்ளார். ஆனால் இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளைப் பார்த்த அந்நிறுவனத்தார், எதிர்பார்த்தபடி தரமாக இல்லை என்று கூறி, படத்தை கிடப்பில் போட்டுவிட்டதாம்.

