விஜய் மகன் சஞ்சய், விக்ரம் மகன் துருவ் ஆகியோருடன் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மகன் அமீனும் இணைந்துள்ளார்.
மூவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டனராம். இந்தப் புதுக்கூட்டணி திரையுலகிலும் தொடரும் என்றும் மூவரும் இணைந்து பணியாற்ற அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இயக்குநராக வேண்டும் என்று சஞ்சய் கனவு கண்டாலும், தீவிர சண்டைப்பயிற்சி, நடனப் பயிற்சியை மேற்கொள்ளப் போகிறாராம். எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் முதலில் நடிகராக அறிமுகமாகிய பிறகுதான் அவர் படம் இயக்குவார் என்று கூறப்படுகிறது. நண்பர்கள் இருவரும் கோலிவுட்டில் அடியெடுத்து வைக்கும் வரை துருவ் தொடர்ந்து படங்களில் நடித்து வருவார் எனத் தெரிகிறது.
இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் வாழ்க்கையைப் படமாக்க ஒருதரப்பு முயன்றதும் அதற்கு மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததும் நாடறிந்த செய்தி.
குறிப்பாக இயக்குநரும் நாம் தமிழர் கட்சித் தலைவருமான சீமான், இந்தத் திரைப்படத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து சேதுபதிக்கும் சீமானுக்கும் இடையே பனிப்போர் நடப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் அண்மையில் வெளியீடு கண்ட 'கடைசி விவசாயி' படத்தைப் பார்த்த சீமான் மொத்தமாக நெகிழ்ந்து போனாராம். விஜய் சேதுபதியின் நடிப்பு அவரை வெகுவாகக் கவர்ந்ததை அடுத்து இருவரும் சந்தித்துப் பேசி உள்ளனர்.
அதன் பிறகு பனிப்போர் முடிவுக்கு வந்து, இருவரும் ராசியாகிவிட்டனராம்.
ரஜினியின் அடுத்த படம் தொடர்பான அறிவிப்பு இயக்குநர் தேசிங்கு பெரியசாமியை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரஜினி தனக்குத்தான் வாய்ப்பு தருவார் என்று பெரிதும் நம்பி இருந்தாராம். ரஜினியுடன்கூட பலமுறை தொடர்பு கொண்டு பேசி, தம்மிடம் கூறிய கதையை வேறு யாருக்கும் சொல்லிவிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால்தான் நீண்ட காலம் காத்திருந்ததாக நெருக்கமானவர்களிடம் புலம்பியுள்ளார் தேசிங்கு ராஜா. ரஜினிக்காக உருவாக்கிய கதையில் சூர்யாவை நடிக்க வைக்க அவர் முயற்சி செய்வதாகத் தகவல்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், சேதுபதி நடிக்கும் படம் 'விக்ரம்' அதன் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அடுத்து தெலுங்கில் அல்லு அர்ஜுடன் இணையப் போகிறாராம் லோகேஷ். இவர் சொன்ன கதை பிடித்துப்போக, இரண்டொரு மாதங்களிலேயே படப்பிடிப்பைத் தொடங்கலாம் என்று கூறி உள்ளார் அல்லு. இது 'புஷ்பா'வை விட பிரம்மாண்டமாக இருக்குமாம்.

