தாம் நடிக்கும் படங்களுக்கு இந்தியிலும் தெலுங்கிலும் பலத்த வரவேற்பு கிடைப்பதாகச் சொல்கிறார் விஜய் ஆண்டனி. இதையடுத்து நேரடி இந்திப் படத்தில் நடிக்க உள்ளதாக அண்மைய பேட்டியில் கூறியுள்ளார்.
"'பிச்சைக்காரன்' படத்துக்குப் பிறகு தெலுங்கில் எனக்கென ஓர் இடம் கிடைத்திருப்பதாகக் கருதுகிறேன். அதேபோல் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட எனது படங்களின் வசூல் நன்றாக உள்ளது," என்கிறார் விஜய் ஆண்டனி.
தற்போது 'ரத்தம்' படத்தில் நடித்து வருபவர், தாம் ஏற்கெனவே நடித்து முடித்துள்ள 'தமிழரசன்', 'அக்னி சிறகுகள்' உள்ளிட்ட படங்கள் வெளியீட்டுக்காகக் காத்திருக்கிறாராம். சரி, 'ரத்தம்' என்ற தலைப்பு ரணகளமாக இருக்கிறதே?
"பொதுவாக நான் நடிக்கும் படங்களின் தலைப்பு, கதைக்கேற்றவாறுதான் வைக்கப்படும். 'பிச்சைக்காரன்' என்ற தலைப்பும்கூட அப்படி வைக்கப்பட்டதுதான்.
"நம் மனதில் தோன்றும் நேர்மறை, எதிர்மறை உணர்வுகளுக்கும் வெற்றிக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. நல்ல கதை அமைந்து, நாமும் கடுமையாக உழைத்தால் வெற்றிபெறலாம் என்பது மட்டுமே எனக்குத் தெரியும். அதுதான் என் கொள்கை," என்று சொல்லும் விஜய் ஆண்டனி, 'பிச்சைக்காரன்' படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகி வருவதாகக் கூறியுள்ளார்.
"முதல் பாகத்தைவிட அடுத்த படைப்பு பெரிதாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, நல்ல கதை அமைந்தது. அதனால் படப்பிடிப்பை உடனடியாக தொடங்கிவிட்டோம்," என்கிறார் விஜய் ஆண்டனி.

