ஒரு மாதத்தில் சிங்கப்பூர் இளையர்களால் எடுக்கப்பட்ட 'விழியோரம்' வலைத்தொடர் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் திரைப்படமாக கார்னிவல் சினிமாஸில் திரையிடப்பட்டது.
திருமதி கீர்த்தனாவின் திரைக்கதையிலும் ரிஷிவர்மனின் இயக்கம் மற்றும் தயாரிப்பிலும் வெற்றி நடை போடுகிறது அந்த வலைத்தொடர்.
வேலை தேடிக்கொண்டு இருக்கும் வாசு, அளவுக்கு அதிகமாக அன்பு காட்டும் தாராவை சற்றும் எதிர்பாராத சூழ்நிலையில் சந்திக்கிறார். காதல் வளர்கிறது.
போதைப் பொருள் புழக்கத்தால் தந்தையை இழந்த தாரா, வாசுவும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதை அறிய நேரிடுகிறது.
இதற்கிடையில், துருவ் என்ற காவல் துறை அதிகாரி, வாசுவைக் கையும் களவுமாகப் பிடிக்கத் துடிக்கிறார். இறுதியில் பெரும் அதிர்ச்சி. துருவ்வின் நெருங்கிய தோழியான ஸ்வாதி தான், போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கே தலைவி என்று தெரிய வருகிறது.
திகில் படம் என்றாலும் ஆங்காங்கே நகைச்சுவையும் உள்ளது. படத்தில் மொத்தம் ஐந்து பாகங்கள். ஒவ்வொரு பாகத்திலும் மேற்கோள்கள் உள்ளன. பாடல்கள் அனைத்துமே துடிப்புடன் இருந்தன.
"விஜய்யின் 'மாஸ்டர்' படத்தின் இசையை முன்மாதிரியாகக் கொண்டு 'விழியோரம்' தொடருக்கு இசையமைத்தேன். சிறப்பாக இருப்பதாகப் பலரும் பாராட்டினர்," என்கிறார் இசையமைப்பாளரான திரு சாந்த் ஜே.
திரையரங்கில் ரசிகர்களிடம் காட்சியின் தன்மைக்கு ஏற்ப கைதட்டல், சிரிப்பு, அச்சம் என பல உணர்வுகள் வெளிப்பட்டன.
"படம் பார்க்கும் பொழுது, புதுமையாக இருந்தது. இறுதிப் பாகம் எதிர்பாராத திருப்பம். படத்தை நன்கு காட்சிப்படுத்தி உள்ளனர்," என்கிறார் படம் பார்க்க வந்த திருமதி வந்தனா நரேந்திரன்.
இப்படத்தில், லாவண்யா, சக்தி, அர்ஜுன், ஷோபா என்று பல புது முகங்களை ரிஷி வர்மனும் கீர்த்தனாவும் அறிமுகம் செய்துள்ளனர்.
"கொவிட்-19 சூழலில் இருந்த மக்களுக்குப் புது உணர்வூட்டும் விதமாக இத்தொடரை படமாக வெளியிட்டோம். வரவேற்பு சிறப்பாக உள்ளது" என்கிறார் திரைக்கதை எழுத்தாளர் திருமதி கீர்த்தனா. கொவிட்-19 கட்டுப்பாடுகளிடையே படக் காட்சிகள் படமாக்கப்பட்டதால், இப்படக்குழுவினர் பல சவால்களைச் சந்தித்துள்ளனர்.
"இது எங்களது முதல் படம் ஆகும். ஒன்றாகக்கூடி படம் எடுப்பதற்கு பல கட்டுப்பாடுகள் இருந்தாலும், படக் குழுவினர் மிக அருமையாக ஒத்துழைத்தனர். மேலும், முடிந்த அளவு மட்டுமே செலவு செய்தோம். சில இடங்களில் மட்டுமே படப்பிடிப்பை நடத்த முடிந்தது. எனினும் படம் சிறப்பான முறையில் உருவானது. ரசிகர்கள் வரவேற்பு உற்சாகமளிக்கிறது," என்கிறார் இயக்குநரும் தயாரிப்பாளருமான திரு ரிஷிவர்மன்.

