சின்னத்திரையில் இருந்து திரையுலகில் அறிமுகமாவோர் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது. அந்த வகையில் கோடம்பாக்கத்தின் புதிய வருகை பவித்ரா லட்சுமி. பொங்கல் திருநாளையொட்டி வெளியீடு கண்ட 'நாய் சேகர்' படத்தின் நாயகி.
முதல் படத்தின் மூலம் கிடைத்த அனுபவம் தனது திரைப்பயணத்துக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுக்கும் என்று நம்புகிறாராம்.
"ஆனால் சினிமாவில் நாயகியாக நடித்திருக்கிறேன் என்பதைத்தான் நம்ப முடியவில்லை. அண்மைய சில மாதங்களில் நடந்தவை எல்லாம் கனவுபோல் தோன்றுகிறது. இன்று சமூக வலைத்தளங்களில் என்னைப் பின்பற்றுவோர் எண்ணிக்கை அதிகரித்தபடியே உள்ளது. எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டுகிறார்கள். அந்த வகையில் இந்த அன்பர் தினம் எனக்கு மறக்க முடியாத ஒன்றாக இருக்கும்," என்று சொல்லும் பவித்ரா, அடுத்து 'உல்லாசம்' என்ற படம் மூலம் மலையாளத் திரையுலகிலும் அறிமுகமாகிறார். மேலும், கதிர், நட்டி ஆகியோருடன் 'யூகி' படத்தில் நடித்து வருகிறார். இது தமிழ், மலையாளம் என ஒரே சமயத்தில் இரு மொழிகளில் படமாக்கப்படுகிறதாம்.
எப்போதும் இயல்பாக இருப்பதே தனது முன்னேற்றத்துக்கான காரணம் என்று குறிப்பிடுபவர், இன்றுள்ள இளம் ரசிகர்கள், வெளிப்படையான பேச்சையும் போக்கையும்தான் விரும்புகிறார்கள் என்கிறார்.
பவித்ரா லட்சுமியின் சொந்த ஊர் கோயம்புத்தூர். பள்ளிப் படிப்பை அங்கு முடித்தவர், ஆடை வடிவமைப்பு தொடர்பான மேற்படிப்பையும் முடித்துவிட்டு, மாடலிங் துறைக்கு வந்துள்ளார். அப்போதுதான் இயல்பாகவே சினிமா மீதான ஆர்வம் ஏற்பட்டதாம்.
"நான் பெற்ற வெற்றிகளும் அவற்றுக்கான எனது உழைப்பும்தான் இன்று எனக்கான இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. இரண்டரை வயதிலேயே பரதம் கற்றுக்கொள்ளத் தொடங்கினேன். அப்போதே நான் ஆடும்போது யாராவது என்னைப் பார்த்து ரசிப்பது, சிரிப்பது எல்லாம் பிடித்திருந்தது.
"அவர்களுக்கும் நமக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அப்படி இருந்தும் நம்மை ரசிக்கிறார்கள், சில நிமிடங்கள் ஒதுக்குகிறார்கள். பொழுதுபோக்குத் துறையில் மட்டுமே இவ்வாறு நடக்கும். அதைப் புரிந்து கொண்ட பிறகு இந்தத் துறை மீதான ஆர்வம் அதிகரித்துவிட்டது," என்று சொல்லும் பவித்ரா லட்சுமி, கடந்த 2015ஆம் ஆண்டு 'மிஸ். சென்னை', 2017ல் 'குயின் ஆஃப் மெட்ராஸ்' என அழகிப் பட்டங்களை பெற்றவர், தொலைக்காட்சிப் போட்டி நிகழ்ச்சிகளிலும் வாகை சூடினார்.
சரி, காதல் குறித்து பவித்ரா என்ன நினைக்கிறார்?
"மொத்த உலகமும் இப்போது இயந்திரமயமாகிவிட்டது. அதைக் கடந்து எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் பிறர்க்கு நாம் கொடுக்கும் அன்புதான் காதல் என்பேன். பெற்றவர்களாக இருந்தாலும், குழந்தைகளிடம் எந்த எதிர்பார்ப்பும் நிபந்தனையும் இன்றி் காட்டும் அன்பும் அக்கறையும் உறவும்தான் காதல். குழந்தைகளுக்கும் இது பொருந்தும். பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடம் எந்தவித எதிர்பார்பும் இன்றி பழகினால் அதுவும் காதல்தான்.
"இந்த ஆண்டு அன்பர் தினத்தையொட்டி எந்தத் திட்டமும் போடவில்லை. படப்பிடிப்பில் பங்கேற்று வருவதால் வெளியே என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை," என்கிறார் பவித்ரா.
எந்த கதாநாயகனுடன் இணைந்து நடிக்க ஆசை என்று கேட்டால், அடுத்த நொடியே 'இளையதளபதி விஜய்' என்று பதில் கிடைக்கிறது. விஜய் நடித்த படங்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் பார்த்ததாகச் சொல்கிறார்.
"நிறைய பேசக்கூடிய, பார்ப்பதற்கு பெரிய கண்களுடனும் குறும்புத் தனத்துடனும் இருக்கும் இளையர்களை எனக்குப் பிடிக்கும். படைப்பாற்றலுடன் இருந்தால் கூடுதலாக நேசிப்பேன்," என்று கலகலப்பாக, வெளிப்படையாகப் பேசும் பவித்ராவும் காதல் தோல்வியை சந்தித்தவர் என்பதுதான் இளையர்களுக்கு அதிர்ச்சி தரும் தகவல்.
இவர் ஒருவரை விரும்பியுள்ளார். தமது விருப்பத்தை மின்னஞ்சல் வழி அவருக்குத் தெரிவித்துள்ளார்.
"ஆனால் 'அவர்' என் காதலை ஏற்கவில்லை. தொடங்கிய வேகத்தில் அந்தக் (ஒருதலைக்) காதல் முடிவுக்கு வந்துவிட்டது. அதன் பிறகு வேறு யாரையும் காதலிக்க வேண்டும் என்று இதுவரை தோன்றவில்லை. ஒருவேளை நான் யாரையாவது காதலிப்பதாகச் சொன்னால் வீட்டில் எதிர்ப்பு இருக்காது என நம்புகிறேன். காரணம், நான் எதையும் சிறப்பாகச் செய்வேன் என்ற நம்பிக்கை," என்கிறார் பவித்ரா.

