தமிழில் தலைப்பு வைத்தால் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என்ற சலுகை இனி கிடையாது. இந்த விவரம் தெரியவந்ததும் கோடம்பாக்கத்தில் மீண்டும் ஆங்கிலத் தலைப்புகள் அதிகரித்துவிட்டன.
இந்நிலையில், 'கூர்மன்' என்ற வித்தியாசமான தலைப்புடன் திரை ரசிகர்களை அசத்த வந்துள்ளார் இயக்குநர் பிரயான் பி.ஜார்ஜ்.
தனது படம் வெளியானதும் மொத்த திரையுலகமும் தம்மைத் திரும்பிப்பார்க்கும் என்றும் அதற்கு முன்னோட்டமாக அண்மையில் வெளியிடப்பட்ட படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டிக்குக் கிடைத்துள்ள பலத்த வரவேற்பு உற்சாகத்தை அதிகப்படுத்தி உள்ளதாகவும் சொல்கிறார் இயக்குநர்.
'கூர்மன்' என்ற தலைப்பை வைக்க சில காரணங்கள் உள்ளனவாம்.
"இது மனநல நிபுணர்கள் அல்லது மனதைப் படிப்பவரின் கதை என்று சொல்லலாம். இவர்கள் எதிரில் இருப்பவரிடம் பேசிப்பேசியே அவர்களின் உள்மனத்தில் இருக்கும் ரகசியங்களை வாங்கிவிடக் கூடியவர்கள்.
"இதுபோன்ற நிபுணர்கள் எதிரில் இருப்பவர்களின் முக அசைவை வைத்தே அவர்களின் மனத்தில் உள்ளதைப் படித்துவிடுவார்கள். அப்படிப்பட்ட அசாத்தியமான திறமைசாலிகளை மையமாக வைத்து இந்தப் படத்தின் கதைக்களத்தை அமைத்துள்ளேன். என்னுடைய நாயகன் எதையும் கூர்மையாக கவனிப்பவன், கூர்மையாகச் செயலாற்றுபவன் என்பதால் இந்தத் தலைப்பை வைத்திருக்கிறோம்," என்கிறார் இயக்குநர் பிரயான் பி.ஜார்ஜ்.
ஒரே வரியில் சொல்வதானால், புத்திக்கூர்மையுள்ள நாயகனின் திறமையைக் காவல்துறை பயன்படுத்திக்கொள்கிறது. அதன் பின்னணி என்ன என்பதைத்தான் இரண்டு மணி நேர படமாக காட்டப் போகிறார்கள். குற்றச் சம்பவங்கள், திகில் என்று தொடக்கம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாக இருக்குமாம்.
"திருக்குறளில் 'குறிப்பறிதல்' அதிகாரத்தில் 701வது குறளில் 'கூறாமை நோக்கக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும் மாறாநீர் வையக் கணி' என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.
"அவரது வாக்குப்படி இதுபோன்ற திறமையானவர்கள் உலகத்துகே அழகு சேர்ப்பவர்கள். இந்த குறளுக்கும் இந்தப் படத்தின் கதைக்கும் கூட தொடர்பிருக்கிறது," என்று பிரயான் பி.ஜார்ஜ் சொல்வதைப் படம் பார்த்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.
'மூடர் கூடம்', 'எங்கிட்ட மோதாதே' படங்களின் நாயகன் ராஜாஜிதான் நாயகன். கதைப்படி, நாயகன் இளைஞராகவும் அதேநேரம் முதிர்ச்சியுடன் செயல்படும் பக்குவம் உள்ளவராகவும் இருக்க வேண்டுமாம். ராஜாஜிதான் பொருத்தமாக இருந்ததாகச் சொல்கிறார்.
"ஒரு ஃபிளாஷ்பேக் பகுதியில் காவல்துறையில் பணியாற்றுபவராக வரும் அவர், மற்றொரு பகுதியில் வயதானவராக இருப்பார். இன்னொரு காட்சியில் தலைகீழாக நிற்க வேண்டும் என்றேன். உடனே 'டூப்' போடாமல் தாமே நடிப்பதாகச் சொல்லி முன்வந்ததுடன், எங்கள் தேர்வு மிகக் கச்சிதமானது என்பதை நிரூபித்தார்.
"தினந்தோறும் படப்பிடிப்பை நடத்தியதால் யாருக்குமே ஓய்வில்லை. எனவே அவர் எப்போது பயிற்சி மேற்கொண்டார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அந்த ரகசியம் தெரியாதவரை குழப்பமாக இருக்கும்," என்கிறார் இயக்குநர்.
"அவர் ஒரு கற்பனைக் கதாபாத்திரமாக, ஒரு மாயையாக படத்தில் வந்து போவார். கதைப்படி அவர் ஒரு மருத்துவர்.
"தமிழ் பேசத் தெரிந்த நாயகிதான் தேவை எனத் தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டதும், அதை ஏற்றுக் கொண்டோம். அப்போது மனத்துக்குள் பளிச்சென்று தோன்றியவர் ஜனனிதான்.
"இயக்குநர் பாலாவிடம் இருந்து தன் சினிமா வாழ்க்கையைத் தொடங்கியவர் என்பதால் நடிப்பில் அசத்தி உள்ளார் ஜனனி.
"அது மட்டுமல்ல, அவரது பணிவும் எளிமையும் என்னைக் கவர்ந்த அம்சங்கள். பல பெரிய இயக்குநர்களுடன் பணியாற்றிய அனுபவம் உள்ளபோதும், அறிமுக இயக்குநரான என்னிடம் எந்தவித பந்தாவும் இன்றி பேசி, படத்துக்காக கடுமையாக உழைத்தார். 'தெகிடி' படத்தில் அவர் நாயகி, நான் இணை இயக்குநர். அன்று கொடுத்த மரியாதையில் இம்மியளவும் குறையவில்லை. எனக்கு மட்டுமல்ல, அனைவரிடமும் மரியாதையாக நடந்து கொள்வார்," என்கிறார் பிரயான்.

