'மீசைய முறுக்கு' பட நாயகி ஆத்மிகாவை அவ்வளவு எளிதில் ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. இயல்பான நடிப்பு, வசீகரிக்கும் தோற்றம், அழகிய சிரிப்பு உள்ளிட்ட அம்சங்களைவிட அவர் சென்னைப் பெண் என்பது அதிமுக்கிய தகவல்.
அறிமுகப் படத்துக்குப் பிறகு ஏனோ ஆத்மிகாவுக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. இந்நேரம் பார்த்து 'கோடியில் ஒருவன்' படம் அவரை மீண்டும் கோடம்பாக்கத்துக்கு அழைத்து வந்தது.
'கண்ணை நம்பாதே', 'காட்டேரி', 'நரகாசூரன்' ஆகிய படங்களிலும் நடித்து முடித்துள்ள ஆத்மிகாவுக்கு உலகில் மிகவும் பிடித்தமான ஊர் என்றால் அது சென்னை மாநகரம்தான் என்கிறார்.
"உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கு எத்தனை வசதிகளை அனுபவித்தாலும், சென்னை மாதிரி வராது," என்கிறார்.
முதல் படத்துக்கும் இரண்டாவது படத்துக்கும் இடையே நான்கு ஆண்டு இடைவெளி ஏற்பட்டது ஏன் என்று கேட்பவர்களுக்கு ஆத்மிகா தரும் சுருக்கமான பதில், அதற்கு தாம் காரணமில்லை என்பதுதான்.
"நான்கு ஆண்டுகளில் கொரோனா நெருக்கடியிலேயே இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இடையிடையே சில படப்பிடிப்புகளுக்காக அழைப்பு வந்தபோது, நானும் கூடுமானவரை சமாளித்து நடித்தேன்.
"ஏற்கெனவே நடித்து முடித்த 'நரகாசூரன்' முன்பே திட்டமிட்டமிட்டிருந்தபடி வெளியாகி இருந்தால், இவ்வளவு பெரிய இடைவெளி ஏற்பட்டிருக்காது. மற்ற இரண்டு படங்களும் சில பிரச்சினைகள் காரணமாக இன்னும் வெளியாகவில்லை.
"ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதோடு ஒரு நடிகரின் வேலை முடிந்துவிடுகிறது. படம் எப்போது வெளியாகும் என்பது நம் கையில் இல்லை.
"இன்றுள்ள நெருக்கடி மிகுந்த சூழலில், ஒரு திரைப்படத்தை வெளியிடுவதற்கான சரியான தேதி கிடைத்து, அதற்கேற்ப படத்தை முழுமையாக தயார் செய்து வெளியிடுவதற்குள் தயாரிப்பாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
"மூன்று படங்களும் முன்பே வெளியாகி இருந்தால் இப்படியொரு கேள்வி எழுந்திருக்க வாய்ப்பில்லை," என்று புலம்புகிறார் ஆத்மிகா.
'மீசைய முறுக்கு' படத்துக்குப் பிறகு சில வாய்ப்புகள் தேடிவந்த போதிலும் அவற்றை ஏற்கவில்லை என்று குறிப்பிடுபவர், நல்ல கதையா என ஆராயாமல் சகட்டு மேனிக்கு படங்களில் நடித்துவிட்டு காணாமல் போக தமக்கு விருப்பமில்லை என்கிறார்.
தமது படங்கள் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் ஆத்மிகாவின் ஆசை. எனவே, நல்ல கதைகளுடன் வரும் இயக்குநர்களை மதிப்பதற்கு தாம் தயங்கியதோ தவறியதோ இல்லை என்று சொல்கிறார்.
"உதாரணமாக 'கோடியில் ஒருவன்' பட இயக்குநர் அனந்த கிருஷ்ணனிடம் ஒருவித தெளிவு இருந்தது. கதை சொன்னபோதே, படத்தை அவர் சரியான பாதையில் கொண்டு செல்வார் என்ற நம்பிக்கை எனக்குள் வந்தது.
"இப்படி நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே அந்த வாய்ப்பை ஏற்கிறேன். இல்லையெனில் இயலாது என்பதை தயக்கமின்றிச் சொல்லிவிடுவேன். அதிக சம்பளம் என்று ஆசை காட்டுவது எல்லாம் என்னிடம் செல்லாது," என்று சொல்லும் இந்த இளம் நாயகிக்கு 'வந்தோம், பணம் சம்பாதித்தோம், சென்றோம்' என்பது ஒத்து வராதாம்.
படங்களின் எண்ணிக்கை முக்கியமில்லை என்றும் திரையுலகில் நீடித்து நிற்கவேண்டும் என்பதுதான் தமது இலக்கு என்றும் தெளிவாகப் பேசுகிறார்.
சமூக சேவைகளிலும் ஆத்மிகாவுக்கு ஈடுபாடு உள்ளது. சத்தமின்றி சில நல்ல காரியங்களைச் செய்து வருபவர், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மரக்கன்றுகளை நடுகிறார்.
தோழிகள், உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றால், அங்கே ஒரு மரக்கன்றை நடுவாராம். யாரையாவது சந்தித்தால் மரக்கன்றுகளை கொடுத்து நடச் சொல்கிறார்.
"சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் உணர்ந்து, ஐயா அப்துல் கலாம் சொன்னதை தீவிரமாகப் பின்பற்றி அனைவருக்கும் முன்மாதிரியாக இருந்து வந்தார் நடிகர் விவேக்.
"ஒரு கோடி மரங்களை நடுவது அவருடைய கனவு. அதை நான் மட்டுமல்ல, நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்ற வேண்டும். மரம் நடுவதற்காக எங்கே, எப்போது என்னை அழைத்தாலும் நிச்சயமாக வருவேன்," என்கிறார் ஆத்மிகா.
மரக்கன்று நடுவதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து அவ்வப்போது சமூக ஊடகங்களில் விரிவாகப் பதிவிடவும் முடிவு செய்துள்ளாராம்.

