திரைப்படங்களை நேரடியாக இணையத்தில் வெளியிட உதவும் 'ஓடிடி' தளங்களின் வருகை திரையுலகத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளதாகச் சொல்கிறார் ஷ்ருதிஹாசன்.
அண்மையில் அவர் அளித்துள்ள பேட்டியில், 'பாகுபலி' படம் வெளியானதும், பிறமொழி, பிற மாநிலங்கள் என்பன போன்ற தடைகளை மீறி நல்ல படைப்புகள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.
"இப்போது நிலைமை மாறிவிட்டது. அதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது. 'பாகுபலி' இரண்டு பாகங்களும் நாடு முழுவதும் வரவேற்கப்பட்ட நிலையில், தென்னிந்திய மொழிப் படங்களுக்கு வடமாநிலங்களில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
"முன்பெல்லாம் தமிழ், தெலுங்குப் படங்களை மொழிமாற்றம் செய்து வடமாநிலங்களில் வெளியிடுவார்கள். குறிப்பிட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளில் அந்தப் படங்கள் காண்பிக்கப்படும். ரசிகர்களும் அவற்றைப் பார்த்துவிட்டு, 'எங்களுக்கு தென்னிந்திய நடிகர்களைப் பிடிக்கும்' என்று சொல்வார்கள். தென்னிந்திய மொழிப்படங்களை இப்படித்தான் வெளியிட வேண்டும் என்றொரு கருத்து உருவாக்கப்பட்டதாகத் தோன்றுகிறது. இந்தப் படங்கள் மட்டும் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருந்தனர்.
"என் தந்தை கமல்ஹாசன், ரஜினி சார் போன்றோரின் தசாவதாரம், ரோபோ போன்ற படங்கள் தனியாகவும் மற்ற படங்கள் தனியாகவும் வைக்கப்பட்டன. ஆனால் பாகுபலி இந்த நடைமுறையை மாற்றி அமைத்தது. ஓடிடி தளங்கள் வந்ததும், ரசிகர்கள் தங்களுக்குத் தேவையானதை தாமே தேர்வு செய்கின்றனர்.
"ஒரு படத்தை அது தயாரிக்கப்பட்ட மொழியிலேயே பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. வசனங்கள் எழுத்து வடிவில் திரையில் தோன்றும் வசதி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது," என்கிறார் ஷ்ருதிஹாசன்.
ஒருமுறை படப்பிடிப்புக்காக மத்திய பிரதேசம் சென்றிருந்தபோது, அங்கிருந்த ரசிகர் ஷ்ருதி நடித்த தெலுங்குப் படத்தைப் பார்த்ததாகவும் அதில் அவரது நடிப்பு நன்றாக இருந்ததாகவும் கூறினாராம். இதன் மூலம் இந்தி ரசிகர்கள், தென்னிந்திய மொழிப் படங்களைப் பார்ப்பதில் ஆர்வமாக உள்ளதை தம்மால் புரிந்துகொள்ள முடிந்ததாகவும் சொல்கிறார்.
"என்னைப் பொறுத்தவரை பாகுபலி வெளியான பிறகு எந்த மொழியில் தயாரிக்கப்பட்ட படமாக இருந்தாலும், அது நாடு முழுவதும் உள்ள ரசிகர்களைச் சென்றடைவதாகக் குறிப்பிட்டுள்ள ஷ்ருதி, இதன் காரணமாக அதிக எண்ணிக்கையிலான தென்னிந்திய நடிகர்கள் இந்திப் படங்களில் நடிக்கத் தொடங்கி உள்ளதாகச் சுட்டிக்காட்டுகிறார்.
"தெலுங்கு நாயகன் விஜய் தேவரகொண்டா கரன்ஜோகர் இயக்கும் இந்திப் படத்திலும், அஜய் தேவ்கன் இயக்குநர் ராஜமௌலி படத்திலும் நடிப்பதற்கு அண்மைய மாற்றம்தான் காரணம். அலியா பட் தொடங்கி பல இந்தி நாயகிகள் தென்னிந்திய மொழிப் படங்களில் நடிக்கின்றனர்.
"கலாசாரப் பரிமாற்றம் என்பது மிக முக்கியமான விஷயம். அது தவிர்க்க முடியாத ஒன்றும்கூட.
"அதனால்தான் வட இந்தியாவைச் சேர்ந்த என் தாயார் சரிகா, தென்னிந்தியரான என் தந்தையைத் திருமணம் செய்து கொண்டார்.
"அதன் பிறகு என் தந்தை தயாரித்த பல தமிழ்ப் படங்களில் அம்மா ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றினார். மேலும், படக்குழுவினருடன் தமிழில் உரையாடினார். அதேவேளையில் என் தந்தை கமல், கன்னட, தெலுங்குப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். பல்வேறு கலாசாரங்களும் பலவகையான மனிதர்களும்தான் இந்தியாவின் அழகு," என்கிறார் ஷ்ருதி.
தற்போது நடிகர் பிரபாஸுடன் இணைந்து 'சாலார்' என்ற தெலுங்குப் படத்தில் நடித்து வரும் ஷ்ருதியை, இணையத் தொடரிலும் விரைவில் பார்க்க முடியும்.
ஓவியர் சாந்தனும் ஷ்ருதியும் காதலித்து வருவது ஊரறிந்த ரகசியம். இருவருக்கும் பல விஷயங்கள் ஒத்துப் போவதாகவும் ஒரே மாதிரியான ரசனைகள்தான் தங்களை இணைய வைத்துள்ளது என்றும் சொல்கிறார் ஷ்ருதி.
"இருவருக்கும் ஓவியங்கள், கணினித் தொழில்நுட்பங்கள், நாவல்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும். இணையம் வழி உரையாடி, நட்பு பாராட்டி, இப்போது காதலர்களாக மாறி உள்ளோம்," என்று சொல்லும் ஷ்ருதி, சமூக ஊடகங்களில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தனது ஓவியங்களை வைத்து சாந்தனு நடத்திய கண்காட்சி தம்மை நெகிழ வைத்ததாக கூறியுள்ளார் ஷ்ருதி.
"உன்னைக் காதலிக்கவும் கௌரவிக்கவும் எனக்கு தினந்தோறும் ஒரு புதிய காரணம் கிடைப்பது மகிழ்ச்சியாக உள்ளது. உன்னை நினைத்துப் பெருமைப்படுகிறேன்," என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் ஷ்ருதி.

