இந்தி இசையமைப்பாளர் பப்பி லஹரி மும்பையில் நேற்று முன்தினம் காலமானார். அவருக்கு வயது 69.
இந்தியில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், தமிழில் ரஜினி நடித்த 'தாய் வீடு', 'ஆபூர்வ சகோதரிகள்', 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ஷீலா' உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்தார்.
இந்தித் திரையுலகில் கோலோச்சிய பப்பி லஹரியின் துள்ளலான 'டிஸ்கோ' ரகப் பாடல்களுக்கு அன்றைய முன்னணி கதாநாயகர்கள் பலர் நடனமாடி உள்ளனர். அவரது இசையமைப்பில் உருவான படங்களில் ஒரு 'டிஸ்கோ' பாடலாவது இருக்க வேண்டும் என்று இயக்குநர்களும் கதாநாயகர்களும் கேட்டுப் பெற்றனர்.
இந்தியில் இவர் இசையமைத்த 'டிஸ்கோ டான்சர்' படம் தமிழில் 'பாடும் வானம்பாடி' என்ற பெயரில் வெளியானது. இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாக 'நான் ஒரு டிஸ்கோ டான்சர்', 'வாழும்வரை போராடு' ஆகிய பாடல்கள் 1980களில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் நடைபெறும் கலை விழாக்களில் தவறாமல் ஒலித்தன.
'பாடும் வானம்பாடி' படத்தை காலஞ்சென்ற நடிகர் நாகேஷ் சொந்தமாகத் தயாரித்தார். தன்னைப் போன்றே சிறப்பாக நடனமாடக்கூடிய தன் மகன் ஆனந்த்பாபுவை நடனம் சம்பந்தப்பட்ட படத்தின் மூலம் அறிமுகம் செய்ய அவர் விரும்பினார். அதற்கு பப்பி லஹரியின் இசை கைகொடுக்கும் என்று அவர் நம்பினார்.
அதற்கேற்ப அந்தப் படத்தின் பாடல்கள் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டன.
பல்வேறு நோய்களுக்காக ஒரு மாதமாக மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த பப்பி லஹரி, கடந்த திங்கட்கிழமைதான் வீடு திரும்பினார். ஆனால் செவ்வாய்க்கிழமை அவர் உடல்நிலை மீண்டும் மோசமானது. தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும் நோய் அவரது மரணத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. அவரது மறைவுக்கு இந்தித் திரையுலகத்தினரும் அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

