அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில், படத்தின் தயாரிப்புச் செலவு வெகுவாக அதிகரித்துவிட்டது என்றும் இதற்கு அஜய் ஞானமுத்துதான் காரணம் என்றும் தயாரிப்புத் தரப்பு புகார் எழுப்பி உள்ளது.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பே 'கோப்ரா' படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. லலித்குமார் பெரும் பொருள்செலவில் தயாரித்து வருகிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டதையடுத்து பட நாயகன் விக்ரம் உட்பட மொத்த படக்குழுவுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அஜய் ஞானமுத்து டுவிட்டரில் பதிவிட்டதை அடுத்து பிரச்சினை வெடித்துள்ளது.
இந்தப் படத்தை முடிப்பதற்குள் தாம் பல்வேறு போராட்டங்களைக் கடக்க வேண்டியிருந்ததாகவும் தனது போராட்டத்தில் உடன் நின்றவர்களுக்கு நன்றி தெரிவிப்பது தமது கடமை என்றும் அவர் கூறி உள்ளார்.
இந்நிலையில் பணத்தைக் கொட்டி படத்தைத் தயாரித்த லலித்குமாருக்கு அஜய் ஞானமுத்து நன்றி தெரிவிக்காதது மிகப்பெரிய தவறு என்று ஒரு தரப்பு சாடியுள்ளது.
"திட்டமிட்டதைவிட பல மடங்கு செலவை இழுத்துவிட்ட போதிலும் லலித்குமார் அனைத்தையும் தாங்கிக் கொண்டு இப்படத்தை தயாரித்துள்ளார். இதற்காக நன்றி தெரிவிக்கும் பக்குவம் கூட அஜய் ஞானமுத்துவிடம் இல்லை," என்று தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான டி.சிவா கூறியுள்ளார். ஆனால் செலவு அதிகரிக்க தாம் எந்த வகையிலும் காரணம் அல்ல என்று அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.
"சார், 'கோப்ரா' படத்தின் செலவு அதிகரித்ததற்கு நான் காரணம் அல்ல. இதை எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் என்னால் நிரூபிக்க முடியும். எப்போதுமே புரளிகளை விட ஆதாரங்கள் தெளிவாக, உரக்கப் பேசும்.
"படக்குழு என்றால் அது தயாரிப்பாளரையும் உள்ளடக்கிய ஒன்றுதான். எனது தயாரிப்பாளரை நான் என்றும் கைவிடவில்லை," என்று அஜய் ஞானமுத்து விளக்கம் அளித்துள்ளார்.

