இசையமைப்பாளர் இளையராஜாவும் அவரது சகோதரர் கங்கை அமரனும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துப் பேசியுள்ளனர். இது இசை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்காமல் இருந்தனர். மேலும், குடும்ப நிகழ்வுகளிலும்கூட ஒன்றாகப் பங்கேற்பதை தவிர்த்து வந்தனர்.
சில பேட்டிகளில் இளையராஜாவின் செயல்பாடுகளை வெளிப்படையாக விமர்சித்திருந்தார் அமரன். அதேசமயம் தனது மூத்த சகோதரர் இளையராஜாவின் திறமைக்கு ஈடு இணை இல்லை என்பதையும் அவர் பதிவு செய்யத் தவறியது இல்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் சகோதரர்கள் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். அது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் படங்களுடன் பதிவிட்டுள்ளார் கங்கை அமரன்.
"இன்று நடந்த சந்திப்பு... இறை அருளுக்கு நன்றி... உறவுகள் தொடர்கதை," எனக் குறிப்பிட்டுள்ளார் கங்கை அமரன்.
அந்தப் பதிவை அவரது மகனும் இயக்குநருமான வெங்கட் பிரபு தமது சமூக ஊடகப் பக்கங்களில் பகிர்ந்துள்ளதுடன், 'பாவலர் பிரதர்ஸ் மீண்டும் இணைந்துள்ளனர்' என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் சந்திப்பின் மூலம் இளையராஜா, கங்கை அமரன் இடையேயான கருத்து வேறுபாடு முடிவுக்கு வந்திருப்பதாக எண்ணி ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

