முதன்முறையாக காவல்துறை அதிகாரியாக ஒரு படத்தில் நடித்துள்ளார் ஹுமா குரேஷி. அந்தப் படம் 'வலிமை'.
இந்தப் படத்தில் நடித்ததை மிகப்பெரிய வாய்ப்பாகக் கருதுவதாகவும் தமது திரைப்பயணத்தில் 'வலிமை' மிக முக்கியமான படைப்பாக இருக்கும் என்றும் அண்மைய பேட்டி ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"அஜித் படம் என்றாலே அதிரடி சண்டைக் காட்சிகள் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அவருடன் இணைந்து நடிப்பது உற்சாகமான அனுபவமாக இருந்தது. எனக்கும் சில சண்டைக் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதனால் படப்பிடிப்பு முடியும்வரை என்னிடம் இருந்த உற்சாகம் குறையவே இல்லை.
"இயக்குநர் வினோத் தொலைநோக்குப் பார்வை கொண்டவர். 'வலிமை' படத்துக்காக அவர் அமைத்துள்ள திரைக்கதையும் காட்சி அமைப்பும் அவரது பார்வையைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன.
"இந்தப் படத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளேன். இதுபோன்ற வாய்ப்புகள் நடிகைகளுக்கு அவ்வளவு எளிதில் அமைந்துவிடாது. பெண்களுக்குச் சண்டை போடுவது பிடிக்காது, நடிகைகளால் சண்டைக் காட்சிகளில் நடிக்க முடியாது என்பதெல்லாம் பழைய கதை.
"இந்தப் படத்தைப் பார்த்த பிறகு அத்தகைய எண்ணத்தை அனைவரும் கைவிடுவர் என்பது உறுதி. மேலும், 'வலிமை' படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக் காட்சிகளை வேறு எந்த தமிழ்ப் படத்திலும் பார்த்திருக்க மாட்டீர்கள் என்ற உத்தரவாதத்தை என்னால் இப்போதே வழங்க முடியும்.
"இந்தப் படத்தில் எனக்கும் அஜித்துக்கும் இடையேயான உறவை மிக வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தி உள்ளார் இயக்குநர் வினோத். அந்த காட்சிகளில் நான் மனமொன்றி நடித்தேன்.
"ஒரு கதையின் நாயகன், நாயகி என்றால் இருவரும் ஒரு கட்டத்தில் காதலித்தே ஆக வேண்டும் என்பது கட்டாயமல்ல. இந்த வழக்கமான பாணியை இயக்குநர் வினோத் கையாளவில்லை. புதிய கோணத்தை முயன்று பார்த்துள்ளார். இந்த அனுபவம் ரசிகர்களுக்குப் புதிதாக இருக்கும்.
"கொரோனா காலகட்டத்தில் வலிமை படக்குழுவினர் சோர்ந்து போயிருந்தனர். ஆனால், அந்தச் சமயத்தில் அஜித் ரசிகர்கள் எங்கள் மீது காட்டிய அன்பும் அக்கறையும் மறக்க முடியாதவை. மிக அற்புதமான ஓர் அனுபவத்தை அந்த ரசிகர்கள் அளித்துள்ளனர்.
"இரண்டு ஆண்டுகள் நீடித்த கொரோனா நெருக்கடியின்போது அஜித் ரசிகர்களிடம் எனக்கு ஏராளமான குறுஞ்செய்திகள் வந்தன. அவை எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்தன. மனத்தில் நம்பிக்கையை விதைத்தது," என்கிறார் ஹுமா குரேஷி.
"சிறு வயது முதல் எனக்கு சண்டைக் காட்சிகள் நிறைந்த படங்களைப் பார்ப்பது பிடிக்கும். எனவே 'வலிமை' படத்தின் கதையை இயக்குநர் வினோத் மேலோட்டமாகக் கூறியபோதே எனக்குப் பிடித்துப்போனது.
"அதன் பிறகு எனக்கும் சில சண்டைக் காட்சிகள் இருப்பதாக அவர் கூறியபோது உற்சாகமானேன். அந்தக் காட்சிகளை ரசிகர்களுடன் அமர்ந்து திரையில் காணும் நாளுக்காகக் காத்திருக்கிறேன்.
"அஜித்தைப் பொறுத்தவரை நான் புதிதாகச் சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவரைப் போல் எளிமையான, பிறரை மதிக்கக்கூடிய ஒருவரைப் பார்க்க இயலாது. அவருடன் இணைந்து நடிப்பது அலாதியான ஓர் அனுபவம்.
"நான் அவரது தீவிர ரசிகை என்பதைப் பலமுறை கூறியுள்ளேன். அவருடன் இணைந்து நடித்தபோது மேலும் பல நல்ல விஷயங்கள் அவரிடம் இருப்பதை தெரிந்துகொள்ள முடிந்தது. அவருடன் மீண்டும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மகிழ்வேன்," என்கிறார் ஹுமா குரேஷி.
இதற்கிடையே 'வலிமை' படத்துக்கு தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்துள்ளது. இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் பெரும் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிப்ரவரி 24ஆம் தேதி 'வலிமை' படம் வெளியாகும் நிலையில், தனது அடுத்த படத்துக்கான படப்பிடிப்பை விரைவில் துவங்குமாறு தயாரிப்புத் தரப்பிடம் கூறியுள்ளாராம் அஜித்.

