இந்தி முன்னணி நடிகை ஆலியா பட் நடித்துள்ள 'கங்குபாய் கத்யாவாடி' என்ற புதிய படத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார்.
கடந்த 1960களில், மும்பையில் உள்ள காமாட்டிபுரத்தில் வாழ்ந்தவர் கங்குபாய். 'பெண் தாதா' என்று ஊடகங்களால் குறிப்பிடப்படும் அவரது வாழ்க்கையை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி உள்ளது. கதைப்படி, காதலனால் கைவிடப்பட்ட இளம் பெண் ஒரு தாதாவால் அரவணைக்கப்பட்டு, அவரது தங்கையைப் போல் கவனிக்கப்படுகிறாள்.
பாலியல் தொழில் நடக்கும் அந்தப் பகுதியில் வாழ்ந்து வரும் அந்தப் பெண், பின்னாள்களில் தாதாவின் மறைவையொட்டி, அவரின் கீழ் உள்ள மிகப்பெரிய ரவுடிக் கூட்டத்துக்கு தலைவியாகிறார் என்பதுதான் கதை.
இந்தப் படத்தில் கதை நாயகி கங்குபாயும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதுபோல் சித்திரித்துள்ளனர் என்று கூறி, அவரது வளர்ப்பு மகன் பாபு ராவ்ஜி ஷாவும் மற்ற குடும்ப உறுப்பினர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
"என் தாயாரை விலை மகளாகக் காண்பித்துள்ளனர். இதை ஏற்க இயலாது," என்கிறார் பாபு.
"கங்குபாய் சித்திரிக்கப்பட்ட விதம் முற்றிலும் தவறானது. ஒரு சமூக ஆர்வலர் பாலியல் தொழிலாளியாக காட்சிப்படுத்தப்படுவதை எந்தக் குடும்பம் ஏற்றுக்கொள்ளும்? அவரை 'மாஃபியா'வைப் போல் காட்டியிருப்பதை ஏற்க இயலாது," என்று குடும்பத்தார் கூறுகின்றனர்.
ஆலியா பட் போன்ற முன்னணி நாயகி உண்மையை அறிந்துகொள்ளாமல் நடிப்பது சரியல்ல என்று கங்குபாய் குடும்பத்தார் கூறியுள்ள நிலையில், சமூக ஊடகங்களில் ஆலியாவுக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பலர் பதிவிட்டுள்ளனர்.

