இடைவிடாத படப்பிடிப்பு களைப்பை ஏற்படுத்தும் என்றாலும், அதன் மூலம் கிடைக்கும் இனிய அனுபவங்களை மறக்கவே இயலாது என்கிறார் வர்ஷா.
'பிகில்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வலுவாக காலூன்றி உள்ள இவர், தற்போது ஜி.வி.பிரகாஷுடன் 'செல்ஃபி' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள நெருக்கடி மிகுந்த திருவல்லிக்கேணி பகுதியில் அண்மையில் நடைபெற்றதாம். குறுகலான சந்துகளும் சாலைகளும் உள்ள அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும்.
இதனால் ரசிகர்கள் தொல்லை இருக்கும் எனப் பயந்தாராம் வர்ஷா. ஆனால், அவர் நினைத்ததற்கு நேர்மாறாகத்தான் எல்லாம் நடந்துள்ளன.
"உண்மையில், ஒருவர்கூட எங்களுக்கு எந்தவிதத் தொல்லையும் தரவில்லை. தினமும் நாங்கள் காட்சிகளைப் படமாக்கும் வரை ஒரு ரசிகர்கூட எங்களை அணுகிப் பேச முயற்சி செய்யவில்லை. இயக்குநர் 'பேக் அப்' என்று சொன்ன பிறகுதான், எங்களிடம் வந்து பேசினர்.
"திருவல்லிக்கேணி பகுதியில் கிடைக்கும் சில உணவு வகைகள் உலகின் வேறு எந்தப் பகுதியிலும் கிடைக்காதவை. ஜி.வி.பிரகாஷ் இதை நன்கு அறிந்து வைத்துள்ளார். தினமும் அவர் சில உணவு வகைகளை வரவழைத்து படக்குழுவினருக்கு வழங்குவார். அவற்றுள் சமோசாவும் தயிரில் தயாராகும் 'லஸ்ஸி'யும் ரொம்பவும் சுவையானவை.
"வழக்கமாக உணவு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பவள் என்பதால் இதுபோன்ற உணவு வகைகளை, குறிப்பாக இனிப்புகளைச் சாப்பிட மாட்டேன். ஆனால், ஜி.வி.பிரகாஷால் எனது இந்தக் கட்டுப்பாடுகள் பறந்துபோயின. உடல் எடை கூடும் என்பது குறித்து கவலைப்படாமல் அனைத்தையும் ஒருபிடி பிடித்தேன்," என்று சிரித்தபடி படப்பிடிப்பு அனுபவங்களை விவரிக்கிறார் வர்ஷா.
திருவல்லிக்கேணி வீடுகளில் உள்ள அறைகளும் மிகச் சிறியதாகத்தான் இருக்கும். அங்கு கேமராவையும் விளக்குகளையும் வைத்து காட்சியைப் படமாக்கு வதற்கு கூடுதலாக மெனக்கெட வேண்டியிருக்கும்.
"கேமராவை ஓரிடத்தில் வைத்த பிறகு, அதற்குப் பின்னே உள்ள இடைவெளியில் தன்னை நுழைத்துக்கொண்டு நிற்பார் ஒளிப்பதிவாளர். தலையை நிமர்த்தினால் மேல்தளம் தலையில் முட்டும் என்பதால் குனிந்தபடியே இருப்பார். சுற்றிலும் படப்பிடிப்புக்கான விளக்குகள் இருப்பதால், கை கால்களை அசைப்பதில் கூட அதிக கவனம் தேவைப்படும்.
"இந்நிலையில், ஒரு சண்டைக் காட்சியில் நடித்தேன். சண்டைக் கலைஞர் ஒருவர் என்னைக் கன்னத்தில் அறைய வேண்டும். அப்போது நான் முகத்தை திருப்பிக்கொள்ள வேண்டும் என்று இயக்குநர் கூறியிருந்தார்.
"அந்த சண்டைக் கலைஞர் அதிக அனுபவம் உள்ளவர். காட்சியைப் படமாக்கியபோது, நான் எதிர்பார்த்ததைவிட வேகமாக கையை வீசினார்.
"அனால் குறித்த நேரத்தில் என்னால் முகத்தைத் திருப்ப முடியவில்லை. கன்னத்தில் பலத்த அறை விழுந்தது. அவர் அடித்த வேகத்தில் கீழே விழுந்துவிட்டேன்.
"அனைவருக்கும் முன்னால் இப்படி அடி வாங்கிவிட்டோமே என்று ஒரு வகையில் வெட்கமாக இருந்தது. ஆனால், காட்சியை மீண்டும் படமாக்க வேண்டிய அவசியம் எழவில்லை. உண்மையில் சொல்லப்போனால், நாங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாகவே அமைந்தது அக்காட்சி," என்கிறார் வர்ஷா.
இந்தப் படத்துக்காக சென்னை புறநகர்ப் பகுதியில் வர்ஷா பேருந்தில் செல்வதுபோன்ற சில காட்சிகளையும் படமாக்கி உள்ளனர். அப்போது பள்ளிப் பருவத்தில் பேருந்தில் சென்ற நினைவுகள் மனதில் எட்டிப்பார்த்தனவாம்.
"நாள் முழுவதும் அந்தப் பேருந்திலேயே சென்று கொண்டிருக்க வேண்டும் என்று ஆசையாக இருந்தது. பள்ளி நாள்களை நினைவூட்டிய படப்பிடிப்பு இனிமையான அனுபவமாக அமைந்தது," என்கிறார் வர்ஷா.

