நடிகர் ஜெய் இசையமைப்பாளராக அறிமுகமாகி உள்ள படம் 'வீரபாண்டியபுரம்'. இது அவர் நடித்துள்ள முப்பதாவது படம். சுசீந்திரன் இயக்கி உள்ளார்.
"ஜெய் நல்ல இசை ஞானம் உள்ளவர், நல்ல இசையமைப்பாளர் என்பதை முன்பே அறிவேன். ஆனால் இதுகுறித்து அவர் அதிகம் பேசமாட்டார்.
"ஒரு கட்டத்தில் நான்தான் வலிய சென்று என் படத்துக்கு இசையமைக்குமாறு கேட்டுக்கொண்டேன்.
'வீரபாண்டியபுரம்' படத்தின் கதையை நான் முதலில் ஜெய்யிடம் சொல்லவில்லை. கதையை எழுதியதும் நான்கைந்து நாயகர்களிடம் சொன்னேன்.
"எதற்கும் இருக்கட்டுமே என்று ஒருநாள் ஜெய்யையும் தொடர்பு கொண்டு கதை சொல்ல வரட்டுமா என்று கேட்டபோது, அவர் அதெல்லாம் தேவையே இல்லை என்றார். உங்கள் படம் என்றால் கதை கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறிவிட்டார்.
"நீ்ண்ட இடைவெளிக்குப் பிறகு அவர் நடித்துள்ள படம் இது. மேலும், இசையமைப்பாளராகவும் அவரை அறிமுகப்படுத்தும் படம். எனவே 'வீரபாண்டியபுரம்' படத்தின் வெற்றியை உறுதி செய்யும் பொறுப்பையும் நான் சுமக்க வேண்டியிருந்தது," என்கிறார் சுசீந்திரன்.
'வீரபாண்டியபுரம்' அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இசையமைப்பாளராகவும் புதுப்பயணத்தைத் தொடங்கி உள்ளார் ஜெய்.
"ஜெய் இசையமைத்துள்ள விதம் கண்டு வியப்பின் உச்சத்தில் இருக்கிறேன். அவருக்குள் இப்படியொரு திறமை இருக்கிறது என்பதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.
"அதிலும் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள 'காட முட்ட...' பாடலைக் கேட்டு அசந்து போனேன். இவ்வளவு நாள் இந்தத் திறமையை ஏன் ஒளித்து வைத்தீர்கள் என்று அவரிடம் கடிந்து கொண்டேன்.
"அவருடன் இணைந்து உருவாக்கிய 'குற்றம் குற்றமே' படத்தின் பணிகளை 26 நாள்களில் முடித்தோம்.
"இப்போது 'வீரபாண்டியபுரம்' படத்தையும் திட்டமிட்டபிட முடித்திருக்கிறோம் என்றால் அதற்கு ஜெய்தான் காரணம்," என்று பாராட்டித் தீர்க்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
தாம் அடுத்து இயக்கும் படங்களிலும் ஜெய் இசையமைப்பாளராகப் பணியாற்ற வாய்ப்புண்டு என்று குறிப்பிடுபவர், மற்ற படங்களுக்கும் ஜெய் இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்கிறார்.
"நம்மிடம் உள்ள திறமையை வீணடித்துவிடக் கூடாது. உரிய நேரத்தில் அவற்றை வெளிப்படுத்த வேண்டும," என்கிறார் சுசீந்திரன்.