'வலிமை' திரைப்படம் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய தரமான படைப்பாக உருவாகி உள்ளது என்கிறார் அதன் இயக்குநர் வினோத்.
இந்தப் படத்தில் நடித்ததற்காக தாம் பெருமைப்படுவதாக அஜித் தம்மிடம் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைப் பற்றி 'வலிமை' பேசும் என்று கூறும் வினோத், படத்தில் நடித்துள்ள அனைவருமே மிகச்சிறந்த பங்களிப்பை அளித்ததாகச் சொல்கிறார்.
"குடும்பப் படம் என்பதால், ஒரு குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை அலசுவதாக முடிவு செய்துவிட வேண்டாம். ஒரு குற்றச்செயல் குறித்து கதாநாயகனுக்கு விவரம் தெரிய வருகிறது. அதனால் தன் குடும்பம் பாதிக்கப்படும் என்பதை உணர்கிறார். அதன் பின்னர் தன் குடும்பம் சிதைந்துவிடாமல், அந்தக் குற்றத்தைத் தடுக்க அவர் முயற்சி செய்கிறார்.
"படம் முழுமையாக முடிந்த பின்னர் திரையிட்டுப் பார்த்தார் அஜித். அதன் பிறகு இந்தப் படத்தில் நடித்தமைக்காகப் பெருமைப்படுகிறேன் என்றார். மேலும், இந்தப் படத்தில் நடித்த பிறகு பெருமைக்குரிய மகனாக உணர்கிறேன். இந்தப் படத்தை என் பெற்றோர், குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து பார்த்து ரசிப்பேன் என்று அஜித் கூறினார்.
அவர் அப்படிச் சொன்ன தருணத்தை வாழ்நாளில் மறக்க முடியாது," என்கிறார் வினோத்.

