"அப்பாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது சிறு வயது முதல் நான் கண்டு வந்த கனவு என்கிறார் துருவ்.
தன் தந்தையுடன் இணைந்து நடித்த 'மகான்' படம் வெற்றிபெற்றதை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்கிறார்.
"நான் அப்பாவின் தீவிர ரசிகன். அவரது ஒவ்வொரு சாதனையையும் அருகில் இருந்து கவனித்து வளர்ந்திருக்கிறேன். நடிகராக வேண்டும் என்று ஆசைப்பட்டதற்கு அவர்தான் காரணம். ஒரு நடிகராக அவரை மிக அணுக்கமாக கவனித்து குறிப்பெடுத்துக் கொள்வேன்.
"ஆனால் அவருடன் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் திரையுலகில் அறிமுகமான வேகத்தில் அந்த வாய்ப்பு அமையும் என்றும் கனவில் கூட நினைத்ததில்லை," என்கிறார் துருவ்.
'மகான்' படத்தில் தாம் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்காக உடல் அளவிலும் மனதளவிலும் கடுமையாக உழைக்க வேண்டி இருந்ததாகக் குறிப்பிடுபவர், கார்த்திக் சுப்புராஜ் போன்ற இயக்குநர்களுடன் பணியாற்றும்போது, இந்த உழைப்புதான் புதிய உயரங்களைத் தொட வைக்கும் என்று தாம் நம்புவதாகச் சொல்கிறார்.
"ஒரு கதாபாத்திரத்துக்காக நூறு விழுக்காடு உழைக்க வேண்டும் என்பதில் அப்பா எப்போதுமே உறுதியாக இருப்பார். அவர் அளவுக்கு என்னால் உழைக்க முடியாது என்ற போதிலும் என்னுடைய உழைப்பின் அளவு அவரை வருத்தப்படச் செய்வதாக இருக்கக்கூடாது என்பதில் கவனமாக உள்ளேன்.
"திரையுலகில் அவர் சந்தித்த போராட்டங்கள், பிரச்சினைகள் எல்லாம் நான் பிறப்பதற்கு முன்பே தொடங்கி, இன்றுவரை நீடித்து வருகின்றன. அவரது போராட்டம்தான் இன்று நான் உள்ள இடத்தை மிக எளிதாகப் பெற்றுத் தந்திருக்கிறது. எனவே இந்த வாய்ப்பை வீணடிக்க மாட்டேன்," என்கிறார் துருவ்.
வாரிசு நடிகர் என்ற விமர்சனம் எழுவதைத் தடுக்க இயலாது என்று குறிப்பிடுபவர், விக்ரம் மகன் நன்றாக நடிக்கிறார் என்ற பாராட்டு கிடைக்கும்போது, இதுபோன்ற விமர்சனங்களைக் கடந்துவிட்ட மனநிறைவு ஏற்படுகிறது என்கிறார்.
"முன்னணி நடிகரின் வாரிசாக இருப்பது ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதை மறுப்பதற்கு இல்லை. அதேசமயம் வாரிசாக இருப்பதில் சில சாதகமான அம்சங்களும் உள்ளன. அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள தவறமாட் டேன்.
"இப்போதுதான் எனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறேன். வணிக அம்சங்கள் நிறைந்த, நாயகனை போற்றக்கூடிய கதைகளில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. அழுத்தமான கதாபாத்திரம், நல்ல கதையம்சம் உள்ள படங்களையே எதிர்பார்க்கிறேன்.
"16 வயது பையனாக நடிக்கச் சொன்னாலும் சரி. என்னைப் பொறுத்தவரை ஏதாவது சவால் இருக்க வேண்டும்.
"என் தந்தை அப்படிப்பட்ட சவால்களைச் சந்தித்ததால்தான் இந்த உயரத்தை தொட்டிருக்கிறார். காதல் கதைகளுக்கும் எனது நிபந்தனைகள் பொருந்தும். சவால்களில் வெற்றிபெறும்போது உங்களுக்குரிய இடம் தானாகத் தேடிவரும்," என்கிறார் துருவ்.
'மகான்' படம் நேரடியாக இணையத்தில் வெளியானது விக்ரம் ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்திருப்பது தமக்குத் தெரியும் என்று குறிப்பிடுபவர், கொரோனா நெருக்கடி வேளையில், இந்த முடிவுதான் சரியானது என்கிறார்.
"நான் தமிழ் சினிமாவைப் பார்த்து வளர்ந்தவன். நான் நடிக்கும் படங்கள் தமிழ்த் திரையுலகை புதிய உயரங்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
"இதை மனதில் வைத்துக் கொண்டுதான் எனக்கான கதைகளைத் தேர்வு செய்கிறேன்," என்கிறார் துருவ்.

