ஒரே பாடல் மூலம் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் புகழ்பெற்றுவிட்டார் இளம் பாடகி ஜோனிதா காந்தி. விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'பீஸ்ட்' படத்தில் இடம்பெற்றுள்ள 'அரபிக் குதிரை' பாடலைப் பாடியவர். அண்மையில் இணையத்தில் வெளியான இந்தப் பாடலை கோடிக்கணக்கானோர் பார்த்து ரசித்துள்ளனர்.
பிறகென்ன.... ஜோனிதாவை விஜய் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அவர் இதற்கு முன்பு பாடிய பாடல்களையும் ரசிகர்கள் கேட்டு ரசித்து வருகிறார்கள். இந்நிலையில் 'அரபிக்குத்து' பாடல் குறித்தும் அது தொடர்பான அனுபவங்களையும் பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் ஜோனிதா.
இந்தப் பாடல் இணையத்தில் வெளியிடப்பட்டதும், நாள் முழுவதும் இவரது கைபேசி ஒலித்தவண்ணம் இருந்ததாம். சமூக ஊடங்களில் இந்தப் பாடலை மையப்படுத்தி வெளியிடப்பட்ட 'மீம்ஸ்'களை கண்டு ரசித்ததாகச் சொல்கிறார்.
"இதற்கு முன்பு இவ்வளவு புதிய மீம்ஸ்களை ஒட்டுமொத்தமாகப் பார்த்ததே கிடையாது. அனைத்திலும் நான் இருந்தேன் என்பது மற்றொரு ஆச்சரியம். எல்லாம் கண்மூடித் திறப்பதற்குள் நடந்துவிட்டது போல் இருந்தது.
"இதற்கு கதாநாயகன் விஜய்யும் இசையமைப்பாளர் அனிருத்தும்தான் காரணம். அவர்களுடன் இணைந்து பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது என் அதிர்ஷ்டம்," என்கிறார் ஜோனிதா.
ஜோனிதாவுக்கு தமிழில் சரளமாகப் பேச வராது என்பதால் அனிருத்தும் 'பீஸ்ட்' படக்குழுவினரும்தான் இவருக்கு பயிற்சி அளித்துள்ளனர். அதிலும் அனிருத் பாடல் வரிகளில் உள்ள ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தத்தை விளக்கினாராம்.
"கடந்த சில ஆண்டுகளாக தமிழில் பாடி வருகிறேன். அதனால் பாடலில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளுக்கான சரியான உச்சரிப்பை மிக வேகமாக கற்றுக்கொள்ள முடிகிறது. மேலும், அவற்றின் அர்த்தத்துக்கு ஏற்ப உச்சரிக்கவும் முடிகிறது.
"சில சமயங்களில் பாடலுக்கான மெட்டு முன்கூட்டியே என்னிடம் அளிக்கப்படும். அப்போது வீட்டிலேயே பயிற்சி மேற்கொண்டு, அதன் பிறகு ஒலிப்பதிவுக்கூடம் செல்வேன். அதனால் பாடல் பதிவு விரைவாக முடிந்துவிடும்.
"ஆனால் எப்போதுமே இதுபோல் நடக்க வாய்ப்பில்லை. சில சமயங்களில் ஒலிப்பதிவு கூடத்துக்குச் சென்றபிறகுதான் பாடல் வரிகள் கிடைக்கும். அப்போது சில வார்த்தைகளை மாற்றியமைக்கவும் வாய்ப்புண்டு," என்று சொல்லும் ஜோனிதா கனடாவில் பிறந்து வளந்தவர்.
அதனால் இந்திய மொழிகளை இப்போதுதான் மெல்ல கற்று வருகிறார். அதேசமயம், தாம் பாடும் பாடல்களில் எந்தவொரு குறிப்பிட்ட மொழியின் சாயலும் இருக்காது என்கிறார். அரபிக்குத்து பாடலுக்கான விளம்பரங்களில் ஜோனிதாவும் இடம்பெற்றுள்ளார். இதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லையாம்.
"உண்மையில் ரசிகர்களின் ஆதரவும் படக்குழுவினரின் அன்பும் என்னை நெகிழ வைத்துள்ளது. இந்த அளவு பெருந்தன்மையான செயல்பாட்டை நான் எதிர்பார்க்கவில்லை.
"இந்தப் பாடலுக்காக அதிகம் உழைத்துள்ளோம். இந்நிலையில் அதைப் பிரபலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நானே மேற்கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட்டது மனநிறைவு அளிக்கிறது.
"ரசிகர்களுக்கு இந்தப் பாடல் பிடித்திருக்கிறது என்பதுதான் எனக்கு முக்கியமாகப்படுகிறது," என்று சொல்லும் ஜோனிதா திரைப்படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் கொண்டுள்ளார். ஏற்கெனவே ஓர் ஆங்கிலப் படத்தில் நடித்து முடித்துள்ளாராம்.
"தொடர்ந்து படங்களில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு உண்மையில் என்னிடம் பதில் இல்லை. வாய்ப்புகள் கிடைத்தால் நடிப்பை தொடரலாம் என்பதுதான் என் எண்ணம்," என்கிறார் ஜோனிதா காந்தி.

