திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

3 mins read

 தன் வளர்ச்சியில் மிகுந்த அக்கறை காட்டிய தனது தாயாருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவரது பிறந்தநாளையொட்டி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் இளம் நாயகி பவித்ரா லட்சுமி. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்துள்ள இவர் இப்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தமது அண்மைய பதிவில், சிக்கலான நேரத்திலும் எவ்வாறு துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தது தனது தாயார்தான் என்று குறிப்பிட்டுள்ளார் பவித்ரா. நான் செய்யும் அனைத்து தவறுகளையும் கடந்து என்னை நேசிக்கும் ஒருவர், எனது அனைத்து தோல்விகளையும் கடந்து என்னை நம்பும் ஒருவர் உள்ளார் என்றால் அது என் தாய் தான்," என்று பதிவிட்டுள்ள பவித்ரா, சிறு வயது முதல் வெவ்வேறு தருணங்களில் தனது தாயாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

 தனக்கும் நயன்தாரா வுக்கும் இடையேயான நட்பு தனிச்சிறப்பு வாய்ந்தது என்று கூறியுள்ளார் சமந்தா. தமது அண்மைய சமூக ஊடகப்பதிவில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். "நயன்தாரா சமூக ஊடகங்களில் இயங்குவது இல்லை. எனினும் அவர் தனது அன்பை நம்முடன் பகிர்ந்து கொள்வார். இன்றைய தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி, நமது நட்புக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள். 22.02.2022 என்பதை வலமிருந்து இடம், இடமிருந்து வலம் என்று இருவிதமாகப் பார்த்தாலும் ஒரே மாதிரிதான் இருக்கும்," என்று குறிப்பிட்டுள்ளார் சமந்தா. அதாவது தனிச்சிறப்பு வாய்ந்த இந்த நாளைப் போன்றே, தங்களுடைய நட்பும் தனிச்சிறப்பு வாய்ந்தது என்கிறார்.

மேலும், நயன்தாரா தமது உடன்பிறவா சகோதரி என்றும் கூறியுள்ளார் சமந்தா.

 இப்போதெல்லாம் வில்லனாக நடிப்பதையே முன்னணி நடிகர்கள் விரும்புகிறார்கள்.

முன்னணி நடிகைகளும் இதற்கு விதிவிலக்கல்ல என்றாகிவிட்டது. தெலுங்குப் படம் ஒன்றில் வில்லியாக நடிக்க உள்ளார் அஞ்சலி.

திரிஷா ஏற்கெனவே 'கொடி' படத்தில் வில்லியாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் வெகுவாகப் பேசப்பட்டது. இந்நிலையில் சங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத படத்தில் அஞ்சலியை வில்லியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். இதே படத்தில், முக்கிய வில்லனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ரூ.6 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது என்பதால் தமக்கு அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என நம்பும் அஞ்சலிக்கும் நல்ல சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

 திரையுலகில் கதாநாயகர்களுக்குத்தான் அழுத்தமும் சிரமங்களும் அதிகம் என்கிறார் ராஷ்மிகா மந்தனா.

ஒரு படத்தின் வெற்றி தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவ தும் அவர்கள்தான் என்று அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார். "ஒருவகையில் கதாநாயகிகள் அதிர்ஷ்டசாலிகள். ஒரே சமயத்தில் நான்கைந்து படங்களில் நடிப்பதால், அவற்றுள் ஒரு படம் வெற்றி பெற்றால்கூட போதும், அதை வைத்து ராசியான நடிகை எனப் பெயர் வாங்கிவிடலாம். கதாநாயகர்கள் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில்தான் நடிக்க முடியும். நாயகிகள் தங்கள் அழகைத் தக்க வைக்க தீவிர உடற் பயிற்சி செய்ய வேண்டும்," என்கிறார் ராஷ்மிகா.

 நடிகர் கார்த்தி திரையுலகில் அறிமுகமாகி 15 ஆண்டுகளாகி விட்டன. ஸ்ரீகாந்த் நடிக்கத் தொடங்கி இருபது ஆண்டுகளாகிவிட்டனவாம்.