ஒரே ஆண்டில் ஆயிரம் புது நாயகிகள் தேவை என்றாலும் வட இந்தியாவில் இருந்து அழைத்து வர கோடம்பாக்கத்து இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தயார். அந்த வகையில், புது வரவாக 'காதல் - கண்டிஷன்ஸ் அப்ளை' என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார் சானா மக்பூல்.
இருபத்து ஏழு வயதான இவர், பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில் தானாம். கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்ற 'ஃபெமினா' அழகிப்போட்டியில் இந்திய அளவில் சிறந்த சிரிப்பழகியாக தேர்வு பெற்றார்.
அதன் பிறகு ஏராளமான விளம்பரங்களில் நடித்து, 'மாடலிங்' நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். வழக்கம்போல் இவரை முதல் திரைப்படத்தில் நடிக்க வைத்த பெருமை தெலுங்கு தேசத்துக்கு கிடைத்தது.
தெலுங்கில் வெளியான 'திக்குலு சூடக்கு ராமைய்யா' படத்தில் நாயகியாக நடித்த பின்னர், தொலைக்காட்சி 'ரியாலிட்டி' நிகழ்ச்சியில் பங்கேற்ற கையோடு சானா மக்பூலை தமிழுக்கு அழைத்து வந்து புண்ணியம் தேடிக்கொண்டார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்த இந்தப் படம் வசூல் ரீதியில் ஓரளவு சாதித்தது என்கிறார்கள். ஆனால் சானா மக்பூலுக்கு அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் தமிழில் அமையவில்லை. இந்நிலையில் மகத் ராகவேந்திரா நாயகனாக நடிக்கும் 'காதல் - கண்டிஷன்ஸ் அப்ளை' படத்தில் இவரை நடிக்க வைத்துள்ளனர்.
"திரையுலகில் அறிமுகமான பிறகும் இசைத்தொகுப்பு ஒன்றில் நடித்துள்ளேன். இப்படியெல்லாம் நடித்தால் திரையுலகில் நிலைத்திருக்க முடியாது என்று சிலர் கூறினர். எனக்கு அதைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.
"நான் தனி இசைத்தொகுப்புகளில் நடித்த பிறகுதான் பிரபலமானேன். அப்போது என்னை ஏற்றுக்கொண்ட ரசிகர்கள், இப்போதும் தரமான படைப்புகளில், அது எந்த வடிவத்தில் இருந்தாலும் ஏற்றுக் கொள்வார்கள் என நம்புகிறேன்," என்கிறார் சானா மக்பூல்.
தற்போது நடித்து வரும் தமிழ்ப் படத்துக்கான முக்கிய காட்சிகளை தமிழக கிராமப் புறங்களில் படமாக்கி உள்ளனர். இதன் மூலம் கிராமத்து வாழ்க்கையை நேரில் பார்க்கவும் அனுபவிக்கவும் முடிந்ததாம். சில காட்சிகளில் நடிப்பது தமக்கு சவாலாகவும் இருந்தது என்கிறார்.
"குறிப்பிட்ட ஒரு காட்சியில் நான் கிராமத்துக்கு அருகில் உள்ள குளத்துக்குச் சென்று குளிக்க வேண்டும். பொதுவாக அங்குள்ள பெண்கள் காலை ஏழு மணிக்கெல்லாம் குளத்துக்கு வந்து துணிகளைத் தோய்த்து, அப்படியே குளித்துவிட்டும் செல்வது வழக்கம்.
"அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்பாத இயக்குநர் அரவிந்த், அப்பெண்கள் வருவற்கும் முன்பாகவே காட்சியைப் படமாக்குவது என முடிவு செய்தார். அதனால் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் அங்கு சென்றுவிட்டோம்.
"நடுங்க வைக்கும் குளிரில் குளத்து நீரில் நடந்து சென்று, அருகே உள்ள ஒரு பாறை மீதேறி அமர வேண்டும் என்றார் இயக்குநர். குளத்தில் நடந்து செல்வதில் சிக்கல் ஏதுமில்லை. ஆனால் பாறை மீது ஏறும்போது வழக்கி விழுந்துவிடுவேனோ என்று பயமாக இருந்தது. தவிர, தண்ணீரில் விழுந்துவிட்டால், மீண்டும் உடைகளை மாற்ற வேண்டியிருக்கும். இதனால் படப்பிடிப்பும் தாமதமாகும். எப்படியோ கவனமாக நடித்து முடித்தேன். இதுபோன்ற அனுபவங்கள் அற்புதமானவை," என்கிறார் சானா மக்பூல்.
மற்றொரு காட்சியில் இருசக்கர வாகனத்தில் தனியாகச் செல்ல வேண்டி இருந்ததாம். வாகனம் ஓட்டி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் தயங்கி உள்ளார் சானா. மேலும், கிராமத்தை நோக்கிச் செல்லும் குறுகிய பாதையில் வாகனம் ஓட்ட வேண்டியிருந்ததால், பயமாக உள்ளது என்று இயக்குநரிடம் கூறினாராம்.
"அவர் உடனே தனது உதவியாளர்களை அழைத்து, நான் இருசக்கர வாகனத்தில் செல்லும் சாலையில் ஆங்காங்கே நிறுத்தி வைத்தார். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் உதவுவார்கள் என்று இயக்குநர் சொன்ன பிறகு துணிச்சலுடன் நடித்து முடித்தேன்.
"கொரோனா நெருக்கடி வேளையில் படப்பிடிப்பை நடத்தியபோது, கிராம மக்கள்கூட சற்றே அச்சமடைந்து வீட்டுக்குள் முடங்கியிருந்தனர். கடைகள் எல்லாம் மூடப்பட்டு, மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. அதனால் கிராமங்களின் இயல்பு நிலையைப் பார்க்கும் வாய்ப்பு அமையவில்லை.
"அந்தச் சமயத்தில் சென்னையிலும் சில அலுவலகங்களில் காட்சிகளைப் படமாக்கினோம். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளைத் தளர்த்திய பிறகு வீட்டில் இருந்த படியே பணியாற்றிய ஊழியர்கள் பலரும் அலுவலகத்துக்கு வரத்தொடங்கிவிட்டனர். அதனால் வார இறுதியில் மட்டுமே படப்பிடிப்பை நடத்த முடிந்தது.
"மொத்தத்தில் இந்தப் படத்தில் நடித்தது சவாலும் ஜாலியும் நிறைந்த அனுபவத்தை தந்துள்ளது," என்கிறார் சானா மக்பூல்.

