திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read

 'வலிமை' படத்தை சென்னையில் உள்ள திரையரங்கில் படக் குழுவினருடன் கண்டு ரசித்துள்ளார் ஹுமா குரேஷி. அஜித்தின் ரசிகர்கள் அவர் மீது கொண்டுள்ள அன்பை அவர்களுடைய ஆரவாரம் மூலம் தெரிந்து கொண்ட தாகச் சொல்கிறார். "இப்படியொரு ரசிகர் கூட்டத்தை நான் நேரில் பார்த்ததில்லை. மிக எளிமையான மனிதரின் பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். "இந்தப் படம் என் திரைப் பயணத்தில் மிக முக்கியமானது. முன்பு அஜித்துடன் 'பில்லா-2' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது அதை ஏற்க முடியாமல் போனது. எனவே இம்முறை தேடிவந்த வாய்ப்பைக் கைவிட மனமில்லை," என்கிறார் ஹுமா குரேஷி.

 விக்ரம் படப்பணிகள் பாதிக்கப்படுவதால் 'பிக்பாஸ்' அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளார் கமல். இதையடுத்து சிம்புவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மட்டுமல்ல, சிம்புவும் உற்சாகம் அடைந்துள்ளார்.

அவர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை உறுதி செய்துள்ள நிகழ்ச்சியின் தயாரிப்பு நிறுவனம், ஒரு விளம்பர காணொளியையும் வெளியிட்டுள்ளது. அதில் தோன்றும் சிம்பு, "எதிர்பார்க்கல... நான் இதை எதிர்பார்க்கல... பார்க்கலாமா" என்று சொல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. சிம்பு ஒப்பந்தமானதை அடுத்து கமல்ஹாசன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாராம். இதற்கிடையே, சிம்பு நடித்த 'மாநாடு' படத்தை தெலுங்கில் மறுபதிப்பு செய்ய உள்ளனர். அதில் நாக சைத்தன்யாவும் பூஜா ஹெக்டேவும் நடிக்க உள்ளதாகத் தகவல்.

 நல்ல வாய்ப்பு அமைந்தால் இப்போதும்கூட குத்துப் பாடலுக்கு நடனமாட தாம் தயார் என்கிறார் முன்னாள் உலக அழகி சுஷ்மிதா சென். கடந்த காலங்களில் தாம் ஆடிய குத்துப்பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள தாக அவர் கூறுகிறார்.

"சில ஆண்டுகளுக்கு முன்பு குத்துப்பாடல்களில் நடனம் ஆடினால் அது வெறுப்பாக பார்க்கப்பட்டது. குத்துப் பாடலுக்கு நடனமாட சம்மதித்த தால் எனது இரண்டு மேலாளர்கள் பணியில் இருந்து விலகிவிட்டனர். பின்னர் நிலைமை மாறியது.

"இசை பல வடிவங்களில் இருந்தாலும் இசையை நாம் ரசிக்க வேண்டும். மோசமான படம் என்றாலும், நல்ல பாடல்கள் எப்போதும் உயிர்வாழும்," என்கிறார் சுஷ்மிதா.

இவர் கடைசியாக ராம் மத்வானி இயக்கிய 'ஆர்யா 2' என்ற இணையத்தொடரில் தனது குடும்பத்தைக் காப்பற்ற எதிரிகளை எதிர்த்துப் போராடும் தாயாக நடித்திருந்தார். இதுபோன்ற கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறாராம்.

 தனுஷ் நடிப்பில் வெளியான 'மாரி' படத்தில் இடம்பெற்றுள்ள 'தர லோக்கல்' பாடல் அப்போது பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், இந்தப் பாடலை இணையத்தில் சுமார் நூறு மில்லியனுக்கும் அதிகமானோர் கண்டு ரசித்துள்ளனர்.

இந்தப் பாடலுக்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும், இந்தப் பாடலுக்காக தனுஷுடன் அவர் நடனமும் ஆடியுள்ளார்.

இந்நிலையில், நூறு மில்லியன் பார்வைகளை 'தர லோக்கல்' கடந்திருப்பது தனுஷ் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது.