'கங்குபாய் பாத்திரமாக மாறிப் போனேன்'

'கங்குபாய் பாத்திரமாக மாறிப் போனேன்'

3 mins read
2df2a89c-80ad-4a6a-a440-6133dbc3478e
-

ஒன்­பது வய­தில் தாம் கண்ட கனவு இப்­போது நன­வாகி உள்­ள­தா­கச் சொல்­கி­றார் இளம் நாயகி ஆலியா பட். இவர் நடித்­துள்ள 'கங்­கு­பாய் கத்­தி­யா­வடி' இந்­திப் படம் சர்ச்­சை­யை ஏற்­படுத்தி உள்ள போதி­லும், இந்­தப் படம் ஆலி­யா­வுக்கு பல்­வேறு விரு­து­க­ளைப் பெற்­றுத் தரும் என்­கிற பேச்­சும் உள்­ளது.

சஞ்­சய் லீலா பன்­சாலி இந்­தப் படத்தை இயக்கி உள்­ளார். அவ­ரது இயக்­கத்­தில் ஒரு படத்­தி­லா­வது, அது­வும் சிறிய வேடத்­தி­லா­வது நடித்­து­வி­ட­வேண்­டும் என்­ப­து­தான் ஆலி­யா­வின் சிறு வய­துக் கன­வாம்.

"எனக்­கான வாய்ப்பு அமை­யும் என்ற நம்­பிக்­கை­யு­டன் இத்­தனை ஆண்­டு­க­ளா­கக் காத்­தி­ருந்­தேன். கடந்த 2005ஆம் ஆண்டு திடீ­ரென அவ­ரி­டம் இருந்து அழைப்பு வந்­தது. புதுப்­ப­டத்­துக்­கான நாய­கியை அவர் தேடிக் கொண்­டி­ருப்­பதை அறிந்­தேன்.

"ஆனால் நடிப்­புத் தேர்வு, ஒப்­ப­னைப் பொருத்­தம் என்று பல்­வேறு சோத­னை­களுக்­குப் பிறகு அவ­ரது கதா­பாத்­தி­ரத்­து­டன் நான் பொருந்­திப்­போ­க­வில்லை என்று கூறி­விட்­டார். எனி­னும் என் கண்­களை உற்று நோக்­கி­ய­வர், 'நீ வருங்­கா­லத்­தில் நாய­கி­யாக நடிப்­பாய். இவை கதா­நா­ய­கிக்­கு­ரிய கண்­கள்' என்று அவர் சொன்­ன­தும் அப்­போது மன­தில் ஏற்­பட்ட ஏமாற்­ற­மும் சோக­மும் ஒரே நொடி­யில் பறந்­து­போ­னது," என்­கி­றார் ஆலியா பட்.

மும்­பை­யைச் சேர்ந்த கங்­கு­பாய் என்ற பெண்­ம­ணி­யின் வாழ்க்­கை­யைத் தழுவி இந்­தப் படம் உரு­வாகி உள்­ளது. அவ­ரது வாழ்க்­கை­யைக் கொச்­சைப்­ப­டுத்­தும் வகை­யில் இருப்­ப­தாக கங்­கு­பாய் குடும்­பத்­தார் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்­ள­னர். ஆனால் இவை எல்­லாம் ஆலி­யாவை கொஞ்­சம்­கூட அசைத்­துப் பார்க்­க­வில்லை.

"கன­மான கதா­பாத்­தி­ரத்­தில் நம்­மால் நடிக்க முடி­யுமா என்ற கவலை எனக்கு இருந்­தது. இது­கு­றித்து சஞ்­சய் லீலா பன்­சாலி சாரி­டம் மனம்­விட்­டுப் பேசி­னேன்.

"அவர் என் மீது மிகுந்த நம்­பிக்கை வைத்­தி­ருந்­தார். உன்­னால் முடி­யும் என்று அவர் அளித்த ஊக்­கம்­தான் என்னை நடிக்க வைத்­தது.

"கங்­கு­பா­யின் இளம் வயது, முதுமை என இரு கால­கட்­டங்­களில் நடிக்க வேண்­டி­யி­ருந்­த­தால் எனது குரல் சற்று கன­மாக இருக்க வேண்­டும் என்­றும் உடல் எடை­யைக் கூட்ட வேண்­டும் என்­றும் அறி­வு­றுத்­தி­னார்.

"குரலை மாற்­றிப் பேசு­வ­தற்கு மட்­டும் சிறப்­புப் பயிற்சி பெற்­றேன். உடல் எடை­யைக் கூட்­டு­வ­தற்­காக உண­வுக்­கட்­டுப்­பாடு எல்­லாம் தேவை இல்லை. விருப்­பம்­போல் சாப்­பிட்டு, படப்­பி­டிப்­பில் மகிழ்ச்­சி­யு­டன் கலந்து கொண்­டால் போதும், மற்ற அனைத்­தை­யும் நான் பார்த்­துக் கொள்­கி­றேன் என்று கூறி­விட்­டார்.

"நான் எப்­போ­துமே ஏதா­வது ஒன்றை கற்­பனை செய்­த­வண்­ணம் இருப்­பேன். சில வார்த்­தை­க­ளைக் கொடுத்­தால் போதும். அவற்றை வைத்து மன­த­ள­வில் ஒரு காட்­சியை உரு­வாக்கி, அதில் நடித்­துப் பார்ப்­பேன்.

"கங்­கு­பா­யு­டன் தொடர்­புடைய சம்­ப­வங்­கள் கடந்த 1950களில் நடந்­தவை. அதை மன­த­ள­வில் கற்­பனை செய்து வச­னங்­க­ளைப் பேசி நடித்­தேன். இது­வரை அப்­பா­வி­யான, இளமை துள்­ளும் கல­க­லப்­பான பெண்­ணாக மட்­டுமே திரை­யில் என்­னைக் கண்ட ரசி­கர்­க­ளுக்கு 'கங்­கு­பாய்' படம் நிச்­ச­யம் மாறு­பட்ட அனு­ப­வத்­தைக் கொடுக்­கும்," என்று பட­ப­ட­வென விவ­ரங்­களை கொட்­டு­கி­றார் ஆலியா பட்.

கங்­கு­பாய் கதா­பாத்­தி­ரத்­தில் நடிப்­பது அவ்­வ­ளவு எளி­தான விஷ­ய­மல்ல என்­றும் இத்­த­கைய பாத்­தி­ரத்­தில் நடிக்­கும்­போது தாம் அதை காத­லிக்க வேண்­டி­யி­ருக்­கும் என்­றும் சொல்­ப­வர், தாம் அப்­ப­டித்­தான் செய்­த­தா­கக் கூறு­கிறார்.

"பல மாதங்­க­ளுக்கு நான் கங்­கு­பா­யா­கவே மாறிப்­போ­னேன். அவ­ரைப்­போ­லவே பேசி, சிரித்து, அமர்ந்து, நடந்து என்று முழு ஈடு­பாட்­டு­டன் இருந்­த­தால், என் வீட்­டில் இருந்­த­வர்­களே என்­னைப் பார்த்து மிரண்டு போயி­னர்," என்­றார் ஆலியா.

ராஜ­மௌ­லி­யின் 'ஆர்­ஆர்­ஆர்' படத்­தில் நடித்­தது தென்­ இந்­திய சினி­மா­வில் தமக்கு நல்ல தொடக்­க­மாக அமை­யும் என்று சொல்­ப­வர், தமிழ், தெலுங்குப் படங்­களில் நடிப்­ப­தில் மிகுந்த ஆர்­வம் கொண்­டுள்­ளார்.

கடந்த 1960களில், மும்­பை­யில் உள்ள காமத்தி­பு­ரத்­தில் வாழ்ந்­த­வர் கங்­கு­பாய்.

'பெண் தாதா' என்று ஊட­கங்­க­ளால் குறிப்­பி­டப்­படும் அவ­ரது வாழ்க்­கையை மைய­மாக வைத்து இந்­தப் படம் உரு­வாகி உள்­ளது.