திரைத் துளி­கள்

திரைத் துளி­கள்

2 mins read
71170e3f-9688-4830-b923-9dfaca11d03a
-
multi-img1 of 2

 கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ள 'மாறன்' திரைப்படம் நேரடியாக இணையத்தில் வெளியாகிறது. இப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

 'கனா' திரைப்படம் தமிழில் வெற்றி பெற்றதை அடுத்து, சீனாவில் வெளியாக உள்ளது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான படம் இது. எதிர்வரும் மார்ச் 18ஆம் தேதி இந்தப் படத்தை சீனாவில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் வீராங்கனையாக நடித்திருந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்நிலையில், சீனாவில் இந்தப் படம் வெளியாவது மகிழ்ச்சிக்குரிய தருணம் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

 சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'டான்' திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மார்ச் 25ஆம் தேதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ராஜமௌலி இயக்கியுள்ள 'ஆர் ஆர் ஆர்' படமும் இதே தேதியில் வெளியாவதால் 'டான்' படத்தின் வெளியீடு மே 12ஆம் தேதிக்கு தள்ளிப் போனது.

 'பயணங்கள் முடிவதில்லை' திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துவிட்டன. கடந்த 1982ஆம் ஆண்டு பிப்ரவரி 26ஆம் தேதி அந்தப் படம் வெளியானது. தொடர்ந்து ஓராண்டு திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்த அந்தப் படத்தை ஆர்.சுந்தர்ராஜன் இயக்கி இருந்தார். இந்நிலையில், இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதியை நினைவுகூர்ந்து பாராட்டி ஏராளமானோர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

 இந்தியில் முன்னணி நடிகையான அனுஷ்கா ஷர்மா, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவி ஜுலன் கோஸ்வாமியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க உள்ளார். இதற்காக அவர் சிறப்புப் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அப்போது எடுக்கப்பட்டுள்ள புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார்.

 தமிழில் வெற்றி பெற்ற 'விக்ரம் வேதா' படத்தை இந்தியில் மறுபதிப்பு செய்கின்றனர். இதில், சைஃப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடிக்கின்றனர். இப்படத்தின் முதல் தோற்றச் சுவரொட்டி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழில் இயக்கிய புஷ்கர், காயத்ரி ஆகிய இருவரும்தான் இந்திப் பதிப்பையும் இயக்குகின்றனர். தமிழில் மாதவன், விஜய் சேதுபதி ஆகிய இருவரும் நடித்த இப்படம் வசூல், விமர்சன ரீதியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.