பரத் நடிப்பில் உருவாகி வரும் புதுப்படம் 'முன்னறிவான்'. விஜய் ராஜ் இயக்கும் இந்தப் படத்தில் அவரது ஜோடியாக ஜனனி நடித்துள்ளார்.
மேலும், மிர்ச்சி செந்தில், கரு பழனியப்பன், அஸார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். தரண் குமார் இசையமைத்துள்ளார்.
"முன்னறிவான் என்பதற்கு நடக்கக்கூடிய அனைத்தையும் முன்பே கணிக்கக்கூடிய வல்லமை பெற்றவன் என்று பொருள் கொள்ளலாம். இந்தக் கதையின் நாயகன் அத்தகைய திறன் கொண்டவன் என்பதால் இந்தத் தலைப்பை தேர்வு செய்தோம்.
"இது முழுநீள திகில் படமாக உருவாகி வருகிறது," என்கிறார் இயக்குநர் விஜய் ராஜ்.
இந்தப் படத்தில் மிக நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளனர். அதன்படி ஒவ்வொரு காட்சியையும் ஐந்து முறை படமாக்க வேண்டியிருந்ததாம். அண்மைய பேட்டியில் தனது படப்பிடிப்பு அனுபவங்களை விவரித்துள்ளார் பரத்.
"கதைப்படி நான் அனைத்தையும் முன்கூட்டியே கணிப்பவன். நான் அனைத்தையும் எத்தகைய கோணத்தில் பார்க்கிறேன், கேட்கிறேன், உணர்கிறேன் என்பதை காட்சிப்படுத்த, ஒவ்வொரு காட்சியையும் பல்வேறு சிறு பகுதிகளாக பதிவு செய்துள்ளோம். இதுபோன்ற 700 'ஷாட்'கள் படத்தில் உள்ளன.
எண்ணிக்கை அளவில் இது மிக அதிகம் என்பது மட்டுமல்ல, படமாக்குவதும் மிகக் கடினமான பணி. இதற்காக ஒளிப்பதிவாளர் ஓம் பலவிதமான கேமராக்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
"உதாரணமாக, நான் ஒரு பொருளை உற்றுப் பார்ப்பதாக ஒரு காட்சி. நான் அதைப் பார்ப்பதை முதலில் நேரடியாக, வழக்கமான கேமராவில் படமாக்குவோம். அதன் பிறகு சிறப்புக் கேமராவைக் கொண்டு அதே ஷாட் மீண்டும் படமாக்கப்பட வேண்டும். இப்படி அந்த நொடிப்பொழுதுக் காட்சியை இருபது வெவ்வேறு சிறு பதிவுகளாக மாற்றுவர். அதுவரை நான் அந்தப் பொருளை உற்றுப் பார்த்தபடியே காத்திருக்க வேண்டும் என்பதுதான் சவால். அதிலும் எனது முக பாவனைகளை சிறிதளவும் மாற்றக்கூடாது. இதற்கு அதீத பொறுமை மட்டுமல்லாமல், பொறுமையும் கவனமும் தேவை.
"கேட்பதற்கு எளிதாக இருந்தாலும், நடைமுறையில் இதைச் செயல்படுத்துவது மிகக் கடினமான விஷயம். நம் முக பாவனை லேசாக மாறினாலும்கூட, மீண்டும் அனைத்தையும் முதலில் இருந்து தொடங்க வேண்டியிருக்கும்.
"ஒருவேளை என்னுடன் வேறு கதாபாத்திரங்களும் இணைந்து நடிக்கும் காட்சி என்றால், அவர்களும் இதே போல் நடிக்க வேண்டியிருந்தது. இதற்காக உடல் ரீதியில் மட்டுமல்லாமல், மன ரீதியாகவும் என்னை தயார்படுத்திக்கொண்டேன். நீண்ட நேரம் படப்படிப்புக்கான விளக்குகள் முன்பு நின்றதால் அதன் வெப்பத்தை தாங்க வேண்டியிருந்தது.
"தமிழ் சினிமாவுக்கு இத்தொழில்நுட்பம் புது வரவு. இதன் தாக்கம் எப்படிப்பட்டது என்பதை படத்தை திரையில் பார்க்கும் போதுதான் அனைவராலும் புரிந்துகொள்ள முடியும்," என்கிறார் பரத்.
சில முக்கிய காட்சிகளை இரவு நேரத்தில் வனப்பகுதியில் படமாக்கி உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் தயாராக இருந்த நிலையில், திடீரென மழை பெய்யத் தொடங்கிவிட்டதாம்.
"கடும் மழையிலும் அன்றைய தினம் படப்பிடிப்பை நடத்தினோம். முன்னதாக, மிக விலையுயர்ந்த கேமரா உள்ளிட்ட படப்பிடிப்பு சாதனங்களை மழையில் இருந்து பாதுகாக்க படாதபாடு பட்டோம்.
"நல்ல வேளையாக, பெரிய கூடாரத்தை அமைப்பதற்குத் தேவையான பொருள்கள் கைவசம் இருந்ததால் படக்குழுவினர் இணைந்து தற்காலிக கூடாரத்தை அமைத்தோம். சில மணிநேரங்கள் அனைவரும் அதன் கீழே ஒதுங்கி நின்றோம்.
"மழை விட்டதும் படப்பிடிப்பு தொடங்கியது. சும்மா இருந்த போதும்கூட படம் குறித்தும் எடுக்கப்பட வேண்டிய காட்சிகள் பற்றியும் மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். இதுபோன்ற அர்ப்பணிப்பும் கூட்டு முயற்சியும்தான் ஒரு படம் வெற்றி அடைவதற்குத் தேவையான முக்கிய அம்சங்கள் எனக் கருதுகிறேன்," என்கிறார் பரத்.

