கடந்த பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் வடஇந்திய நடிகைகளின் ஆதிக்கம்தான் நிலவி வந்தது. அதன்பிறகு நயன்தாரா, சமந்தா, நித்யா மேனன் என தென்னிந்திய நடிகைகள் மெல்ல அங்கு வேரூன்றியதை அடுத்து நிலைமை இப்போது மாறியுள்ளது.
இந்நிலையில், இந்தித் திரையுலகில் மீண்டும் தென்னிந்திய நடிகைகள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி உள்ளனர்.
அட்லி இயக்கத்தில் உருவாகும் 'லயன்' படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் நயன்தாரா. சமந்தா நடித்த இந்தி இணையத் தொடரான 'தி ஃபேமிலி மேன்' சில சர்ச்சைகளுக்கு வித்திட்டாலும் சமந்தாவை இந்தி ரசிகர்கள் மத்தியில் பரவலாகக் கொண்டு போய்ச் சேர்த்தது. மலையாளப் படங்களில் கவனம் செலுத்தி வந்த பிரியா மணிக்கும் இந்தத் தொடர் இந்தியில் நல்லதோர் அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தது.
இதையடுத்து, நித்யா மேனன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் அண்மையில் நடித்த படங்கள் நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் வெளியீடு கண்டன.
இந்தப் படங்களைப் பார்த்து ரசித்த வடஇந்திய ரசிகர்களுக்குத் தென்னிந்திய நாயகிகளைப் பிடித்துப்போனது. சமூக ஊடகங்களில் இந்த நடிகைகளைப் பாராட்டிப் பதிவிடுவது, அவர்களுடைய புகைப்படங்களைப் பகிர்வது என தங்கள் பாசத்தைக் காட்டி வருகின்றனர்.
இதையெல்லாம் கவனித்த பாலிவுட் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் சும்மா இருப்பார்களா? அவர்கள் தங்கள் பார்வையை மொத்தமாக தென்னிந்தியத் திரையுலகத்தை நோக்கித் திருப்பியுள்ளனர். அதன் பலனாகவே நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட நடிகைகளுக்கு இந்திப் பட வாய்ப்புகள் தேடி வருகின்றன.
நயன்தாராவைப் பொறுத்தவரை, 'லயன்' படத்துக்காக பெருந்தொகையை சம்பளமாகப் பெற்றுள்ளார். இது அவரே எதிர்பார்க்காத தொகை என்கிறார்கள். ஆனால், படத்தின் தயாரிப்புத்தரப்பு நன்கு யோசிக்காமல், கணக்குப்போடாமல் இந்தத் தொகையைத் தூக்கிக் கொடுக்கவில்லை.
நயன்தாராவின் படங்களுக்கு தென்மாநிலங்களில் கிடைக்கும் வரவேற்பு, அவற்றின் வியாபார மதிப்பு ஆகியவற்றை எல்லாம் கவனித்த பிறகே அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதேபோல், மற்ற நாயகிகளின் சந்தை மதிப்பையும் தெரிந்துகொண்ட பிறகே ஒப்பந்தம் செய்கிறார்கள்.
"நயன்தாரா தமிழில் ஐந்து கோடி ரூபாய் சம்பளம் பெறுகிறார் என்றால், இந்தியில் அது நிச்சயம் இருமடங்காக அதிகரிக்கும். முன்பெல்லாம் தென்னிந்திய நடிகைகளின் அழகு, நடனத்திறமைக்காக இந்திப் படங்களில் வாய்ப்பு அளித்தனர். எனினும், தொழில் போட்டி காரணமாக அவர்களால் பாலிவுட்டில் நீண்டகாலம் தாக்குப்பிடிக்க முடியாமல் போனது. நடிகைகள் அசின், இலியானா போன்றவர்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
"ஆனால் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட இன்றைய நடிகைகள் விவரம் அறிந்தவர்கள். என்ன மாதிரியான பிரச்சினைகளை, எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நன்கு அறிந்து வைத்துள்ளனர். இவர்களின் அழகு, திறமை, சந்தை மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்திப் படங்களில் ஒப்பந்தம் செய்வதோடு தயாரிப்பாளர்கள், இயக்குநர்களின் வேலை முடிந்துவிடுகிறது. அதன்பிறகு ரசிகர்களை எவ்வாறு கவர வேண்டும் எனும் சூட்சுமத்தை அறிந்து வைத்துள்ள தென்னிந்திய நடிகைகள் மற்றவற்றைப் பார்த்துக்கொள்கிறார்கள்," என்கிறார்கள் திரையுலக விவரப்புள்ளிகள்.
தென்னிந்திய நடிகைகளால் நிச்சயம் பாலிவுட்டில் கோலோச்ச முடியும் என்கிறார் நித்யா மேனன். மும்பையில் தமக்கு ஏற்பட்ட ஓர் அனுபவத்தையும் அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.
"பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நடிப்பதால் என்னால் தென்மாநிலங்களின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் தனிமையை அனுபவிக்க இயலாது. காரணம், எல்லாருக்கும் என்னைத் தெரியும். ஆனால், மும்பையில் என்னால் சுதந்திரமாக வலம் வர முடியும் என்று நினைத்தேன்.
"அண்மையில் அங்கு சென்றிருந்தபோது, என் தோழி ஒருவருடன் இரவு உணவுக்காக வெளியே சென்றிருந்தேன். பிறகு நான் தங்கியிருந்த இடத்துக்குச் செல்ல, அந்த உணவகத்துக்கு வெளியே எனது காருக்காகக் காத்திருந்தேன்.
"அப்போது நான் சற்றும் எதிர்பாராத வகையில் ஏராளமான ரசிகர்கள் என்னைச் சூழ்ந்துகொண்டனர். என்னுடைய அடுத்த படங்கள், கதாபாத்திரங்கள் குறித்து அவர்கள் இந்தியில் கேள்விகளை அடுக்கியபோது என்னால் சமாளிக்க முடியவில்லை. மொழிமாற்றம் செய்யப்பட்ட எனது படங்களைப் பார்த்து ரசித்ததாக அவர்கள் கூறினர். அப்படியானால் நேரடி இந்திப் படங்களில், இணையத் தொடர்களில் நடித்தால் எனக்கான வரவேற்பு எப்படி இருக்கும் என யோசித்துப் பார்த்தேன்," என்கிறார் நித்யா மேனன்.
மொத்தத்தில், அடுத்த சில ஆண்டுகளில் இந்திப் படங்களில் ஏராளமான தென்னிந்திய முகங்களைப் பார்க்க முடியும்.

