திரைத் துளிகள்

திரைத் துளிகள்

2 mins read
01077b2d-f32e-4c0f-8411-83c56a3d3500
-
multi-img1 of 3

 'அரபிக்குத்து' பாடல் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள பின்னணிப் பாடகி ஜோனிட்டா காந்தி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அறிமுக இயக்குநர் விநாயக் இயக்கும் இந்தப் படத்தை நயன்தாராவும் அவரின் காதலர் விக்னேஷ் சிவனும் தயாரிக்க உள்ளனர். இது காதலை மையப்படுத்தி உருவாகும் படமாம். "திரைப்படங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பம் ஏதும் இல்லை. அதனால் பல வாய்ப்புகளை ஏற்காமல் தவிர்த்து வந்தேன். எனினும், விநாயக் கூறிய கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலும், உண்மைக் காதலை மையப்படுத்தி உருவாகும் படம் என்பதால் உடனே நடிக்கச் சம்மதித்துவிட்டேன்," என்கிறார் ஜோனிட்டா. இந்தப் படத்தில் இவருக்கு நாயகனாக கிருஷ்ணகுமாரை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர் 'சூரரைப் போற்று' படத்தில் சூர்யாவின் நண்பராக சைதன்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர்.

 திருமணத்துக்குப் பிறகு திரையுலகைவிட்டு ஒதுங்கி இருந்த சாயிஷா மீண்டும் நடிக்க வந்துள்ளார். அண்மையில்தான் ஆர்யா, சாயிஷா தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க விரும்புவதாக சாயிஷா கூற, அதற்கு மறுப்பு ஏதும் தெரிவிக்காமல் பச்சைக் கொடி காட்டியுள்ளார் ஆர்யா. இதையடுத்து, புதுப் படங்களுக்கான கதைகளைக் கேட்டு வருகிறார் சாயிஷா. எடுத்த எடுப்பிலேயே இவரும் ஆர்யாவும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இரண்டாவது சுற்றில் வலுவான கதாபாத்திரங்களில் நடித்துச் சாதிக்க விரும்புகிறேன் என்கிறார் சாயிஷா.

 நிக்கி கல்ராணிக்கு தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில், ரசிகர்களைக் கவரும் வகையில் அண்மையில் எடுக்கப்பட்ட தனது புகைப்படங்களை அவர் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளார். அவற்றைக் கண்ட ஏராளமான ரசிகர்கள் நிக்கியின் அழகைப் புகழ்ந்து தள்ளியுள்ளனர். காதலையும் அழகையும் போற்றும் வகையில் உள்ள திரைப் பாடல்களைக் குறிப்பிட்டு, நிக்கிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவிக்க, "இப்படியொரு அன்பு மழையை எதிர்பார்க்கவே இல்லை," என்று நெகிழ்ந்து போயுள்ளார் நிக்கி. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் 'சிவுடு' என்ற படத்தில் ஆதியுடன் இணைந்து நடித்து வரும் நிக்கி, இணையத் தொடர் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளாராம்.

 நடிகை ஷ்ருதிஹாசன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கிருமி தொற்றியது பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டு இருப்பதாக இவர் சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். "தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டபோதிலும் தொற்றுக்கு ஆளாகி உள்ளேன். விரைவில் அன்புக்குரியவர்களைச் சந்திப்பேன்," என்கிறார் ஷ்ருதி. இவர் விரைவில் குணமடைய வேண்டுவதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

 தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில்

ஆர்.கே.செல்வமணி மீண்டும் வெற்றிபெற்றுள்ளார். இம்முறை இவரை எதிர்த்து இயக்குநர் பாக்யராஜ் தலைமையிலான அணி களமிறங்கியது. நேற்று முன்தினம் நடைபெற்ற வாக்குப்பதிவின் முடிவில் ஏறக்குறைய 1,400 வாக்குகள் பதிவாகின. இதில் 955 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார் செல்வமணி.