விஜய் பிரகாஷ் இயக்கி வரும் புதிய படம் 'உலகம்மை'. இதற்கு முன்னர் 'சாதி சனம்', 'காதல் எஃப் எம்', 'குச்சி ஐஸ்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
இப்போது இவர், எழுத்தாளர் சு. சமுத்திரத்தின் 'ஒரு கோட்டுக்கு வெளியே' என்ற நாவலைத் தழுவி புதிய படத்தை இயக்கி வருகிறார். டாக்டர் ஜெயப்பிரகாஷ் தயாரிக்கிறார்.
'மாஸ்டர்' படத்தில் நடித்த கௌரி கிஷனும் வெற்றி மித்ரனும் ஜோடி சேர்ந்துள்ளனர்.
மேலும் மாரிமுத்து, ஜி.எம்.சுந்தர், அருள்மணி, காந்தராஜ், சாமி, ஜேம்ஸ், பிரணவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
டாக்டர் குபேந்திரன் வசனம் எழுதியுள்ளார். கே.வி.மணி ஒளிப்பதிவு செய்துள்ளார், இளையராஜா இசை அமைத்துள்ளார்.
"எழுத்தாளர் சமுத்திரம் எப்படிப்பட்ட அருமையான படைப்புகளைத் தந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். அவற்றுள் 'ஒரு கோட்டுக்கு வெளியே' நாவல் எனக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
"எனவே அதை திரைப்படமாக எடுக்க விரும்பினேன். சமுத்திரம் காலமாகிவிட்டதால், அவருடைய மனைவியிடம் இருந்து உரிமையைப் பெற்றுள்ளோம்.
"திருநெல்வேலி பின்னணியில் 1970களில் கதை நடக்கிறது. உலகம்மை என்ற கிராமத்துப் பெண்ணைச் சுற்றி கதை நகரும். அந்தக் காலத்தில் நிலவிய சாதி அமைப்பை உலகம்மை எப்படி எதிர்க்கிறாள் என்பதை இந்தப் படம் சித்திரிக்கிறது. இந்தப் படத்தில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் நல்ல பெயர் கிடைக்கும்," என்கிறார் விஜய் பிரகாஷ்.
படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், தொழில்நுட்பப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல்.

