மீண்டும் ஒருமுறை 'பீஸ்ட்' படத்தின் புகைப்படங்கள் வெளியே கசிந்துள்ளன. இதனால் விஜய் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், 'அரபிக்குத்து' பாடலை யூடியூப்பில் இதுவரை 150 மில்லியன் பேர் பார்த்து ரசித்துள்ளனர்.
இது ஒரு புதிய சாதனை என்று விஜய் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், மிக விரைவில் நூறு மில்லியன் பார்வைகளைப் பெற்ற பாடல் என்ற சாதனையையும் 'அரபிக்குத்து' படைத்துள்ளது. இதற்கு முன்பு தனுஷின் 'ரவுடி பேபி' பாடல்தான் இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. அதை இப்போது 'அரபிக்குத்து' முந்தியுள்ளது.
முதல் பாடலே பெரும் கவனம் ஈர்த்துள்ளதால் 'பீஸ்ட்' படத்தின் மற்ற பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இப்போதே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில், அப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா எதிர்வரும் 20ஆம் தேதி நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், 'பீஸ்ட்' படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. வெளிநாட்டில் சில மிருகங்களுக்கு மத்தியில் விஜய் கோபமாக நிற்பது போன்ற ஒரு படமும் தீவிரவாதி ஒருவர் விஜய் அருகே துப்பாக்கியுடன் நிற்பது போன்ற புகைப்படமும் வெளியாகி உள்ளன.
இவற்றை வைத்து படத்தின் கதை என்னவாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் விவாதம் தொடங்கி உள்ளது. 'பீஸ்ட்' படத்தின் அதிகாரபூர்வ முதல் தோற்றச் சுவரொட்டிக்குப் பிறகு அப்படக்குழு வேறு எந்தப் படத்தையும் இதுவரை வெளியிடவில்லை.

