சில சிக்கல்களைக் கடந்து ஒருவழியாக திரை காண்கிறது இயக்குநரும் நடிகருமான கரு. பழனியப்பன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'கள்ளன்' திரைப்படம். அறிமுக இயக்குநர் சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ள படம் இது.
தமிழக மலைக்கிராமங்களில் வேட்டையாடுதலை தொழிலாகக் கொண்ட மக்களின் வாழ்வியலை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ள சந்திரா, அடிப்படையில் நல்ல எழுத்தாளர். உதவி இயக்குநராக அனுபவம் பெற்ற பிறகே தனியாக படம் இயக்கும் துணிச்சல் தமக்கு வந்ததாகச் சொல்கிறார்.
"குற்றச்சம்பவங்களும் திகிலும் நிறைந்துள்ள இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் நிச்சயம் பிடிக்கும். வேட்டைச் சமூகத்தில் பிறந்து வளர்ந்த ஒருவன், இனிமேல் வேட்டையாடக்கூடாது என்று தடை விதிக்கப்படும்போது அதிர்ந்து போகிறான். வறுமையின் காரணமாக வாழ்க்கையில் ஒரேயோரு தவற்றைச் செய்யும் சூழலுக்கும் தள்ளப்படுகிறான். அந்தத் தவறு அவனது வாழ்க்கையை மொத்தமாகப் புரட்டிப் போட்டுவிடுகிறது.
"வாழ வழியில்லாமல் அவனும் அவனது நண்பர்களும் ஓடுகிற ஓட்டத்தில், கடைசியில் அறம்தான் வெற்றி பெறும் என்பதைப் பரபரப்பாகச் சொல்லும் ஒரு வணிகப்படம்தான் இது," என்கிறார் இயக்குநர் சந்திரா தங்கராஜ்.
படத்தின் தலைப்பு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனினும், தீர்ப்பு சாதகமாக வந்ததை யடுத்து, கடந்த ஐந்து ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இப்படம் இப்போது சிக்கலின்றி வெளியீடு காண்கிறது.

