திரைத் துளிகள்

திரைத் துளிகள்

3 mins read
494440a5-8298-4b2d-b712-1a18981881a3
-
multi-img1 of 3

 சிம்பு நடிக்கும் 'கொரோனா குமார்' படம் கைவிடப்பட வில்லை என அதன் இயக்குநர் கோகுல் தெரிவித்துள்ளார்.

சிம்பு கேட்ட சம்பளம் கிடைக்கவில்லை என்பதால் அவர் கோபத்தில் இருப்பதாக வும் இதன் காரணமாக அவர் படப்பிடிப்பில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் பரவியது.

இந்நிலையில், 'வெந்து தணிந்தது காடு' படம் முடிவடைந்த கையோடு, 'கொரோனா குமார்' படப் பிடிப்பில் சிம்பு பங்கேற்பார் என கோகுல் கூறியுள்ளார்.

"இந்தப் படத்தில் பகத் ஃபாசில் வில்லனாக ஒப்பந்தமாகி உள்ளார். மேலும், விஜய் சேதுபதியும் கௌரவ வேடத்தில் நடிக்கிறார். சிலர் வேண்டு மென்றே தவறான தகவல்களைப் பரப்பி வருகின்றனர்," என்கிறார் கோகுல்.

 ரெங்கம்மாள் பாட்டியை ரசிகர்கள் பல திரைப் படங்களில் பார்த்திருக்க முடியும். கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள தெலுங்குபாளையத்தைச் சேர்ந்த இவர், ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நாயகர்களின் படங்களில் நடித்துள்ளார். ஐநூறுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரெங்கம்மாள் பாட்டி இப்போது தள்ளாத வயதில், வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை உணவுக்குக்கூட வழியின்றி அவர் தவிப்பில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

"நானும் அம்மாவும் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். போதுமான வருமானம் இல்லாததால் சொந்த ஊர் திரும்பிய நிலையில் அம்மாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இருவரும் குடிசை வீட்டில்தான் இப்போது தங்கி உள்ளோம். அம்மாவின் தங்கை எங்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்," என்கிறார் ரெங்கம்மாளின் மகன் ராஜகோபால்.

 முதன்முறையாக 'சாணிக்காயிதம்' படத்துக்காக சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளாராம் கீர்த்தி சுரேஷ்.

அண்மையில் வெளியான அப்படத்தின் சுவரொட்டியில், செல்வராகவன் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷும் கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புதிய சுவரொட்டியை வெளியிட்டுள்ளனர்.

இதையடுத்து, கீர்த்தியை முதன்முறையாக சண்டைக் காட்சிகளில் நடிப்பதைக் காண ஆர்வத்துடன் இருப்பதாக ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்தச் சுவரொட்டி குறித்து கீர்த்தி தரப்பில் இருந்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.

 அன்பு இயக்கத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக வாணி போஜன் ஒப்பந்தமாகி உள்ளார். முழு நீள திகில் படமாக உருவாகும் இப்படத்தில் தாதி பாத்திரத்தில் நடிக்கிறார் வாணி.

இயல்பாக நடிக்கக்கூடியவர் என்பதாலும் கனமான கதாபாத்திரம் என்பதாலும் வாணியை ஒப்பந்தம் செய்ததாகச் சொல்கிறார் அன்பு. இவர் இதற்கு முன்பு 'வால்டர்' படத்தை இயக்கி உள்ளார்.

 நடிகர் சங்கத் தேர்தலின்போது பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வரும் 20ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தல் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கின் தீர்ப்பு அண்மையில் வெளியானது. நடிகர் சங்கத் தேர்தல் செல்லும் என்றும் பதிவான வாக்குகளை நான்கு வாரங்களில் எண்ண வேண்டும் என்றும் தேர்தல் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.