மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்க விரும்புவதாகச் சொல்கிறார் மாளவிகா மோகனன்.
தனுஷுடன் இணைந்து நடித்துள்ள 'மாறன்' திரைப்படம் தன் மனதுக்கு நெருக்கமான படங்களில் ஒன்று என்கிறார்.
குறுகிய காலத்தில் முன்னணி நாயகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு எல்லா கதாநாயகிகளுக்கும் அமைந்துவிடாது. அந்த வகையில் தாம் அதிர்ஷ்டசாலி என்கிறார் மாளவிகா.
ரஜினியுடன் 'பேட்ட', விஜய்யுடன் 'மாஸ்டர்', தற்போது தனுஷுடன் 'மாறன்' என தமிழில் மூன்று படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைத்தும் முன்னணி நாயகர்கள் நடித்த படங்கள்.
"ரஜினியுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பது இல்லை. 'பேட்ட' படத்தில் நடித்தபோது படப்பிடிப்பு இடைவேளையில அவரிடம் நிறைய பேச வேண்டும், அவர் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் அவருக்கு அருகில் சென்றதும் எல்லாம் மறந்துபோகும். 'சொல்றா கண்ணா...' என்று அவர் பாசத்துடன் கேட்பார்.
"அவரைச் சுற்றி எப்போதும் ஒரு நேர்மறை சக்தி இருப்பதாக நம்புகிறேன். நான் சிறு வயது முதல் யோகா செய்து வருகிறேன். 'கிரியா யோகா' பற்றி ஒருமுறை அவரிடம் கேட்டபோது, மிக அருமையாகவும் தேர்ந்த யோகா ஆசிரியரைப் போலவும் விளக்கம் அளித்தார். அதைக்கேட்டு அசந்துபோனேன்," என்கிறார் மாளவிகா.
திரையுலகில் சாதிக்க குடும்பம்தான் தமக்கு பக்கபலமாக உள்ளது என்று குறிப்பிடுபவர், பெற்றோருடனும் தம்பியுடனும் வசித்து வருகிறார்.
"நான் வீட்டில் இருக்கும்போது அம்மா பக்கத்து அறைக்குச் சென்றால்கூட கவலைப்படுவேன். அந்த அளவுக்கு நான் அம்மா செல்லம். சினிமா உலகம் ஏற்ற, இறக்கங்கள் நிறைந்தது. அதுபோன்ற ஒரு துறையில் ஈடுபடுவதற்கு குடும்பத்தின் ஆதரவு மிகவும் முக்கியம். குடும்பம் மட்டும்தான் நம்மை எல்லா நிலையிலும் ஆதரிக்கும்," என்று சொல்லும் மாளவிகாவுக்கு, நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்வது மிகவும் பிடித்தமான பொழுதுபோக்காம்.
புதிய நண்பர்களைப் பெற வேண்டும், சாகச முயற்சிகளில் ஈடுபட வேண்டும், புதுப்புது கலாசாரங்கள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்பனவெல்லாம் அவரது விருப்பப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
தனுஷுடன் நடித்த அனுபவம் குறித்து கேட்டால், அவரைப்போல் நகைச்சுவை உணர்வுமிக்க ஒருவரைப் பார்க்க இயலாது என்கிறார். 'மாறன்' படப்பிடிப்பின்போது அவரிடம் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டாராம்.
"இன்று அகில இந்திய அளவில் நன்கு அறியப்பட்ட கதாநாயகனாக அவர் வளர்ந்திருக்கிறார். தேசிய விருது பெற்ற பிறகும் நடிப்புக்கலை தொடர்பாக தாம் கற்றுக்கொள்ள விஷயங்கள் நிறைய இருப்பதாக அவர் சொல்லும்போது ஆச்சரியமாக இருக்கும்.
"எந்த விஷயத்திலும் வெளிப்படையாக பேசக்கூடியவர். தன்னுடன் நடிக்கும் மற்றவர்களும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்று விரும்புவார். வசனங்களை எப்படிப் பேச வேண்டும் என்று குறித்து தருவதுடன், நம்முடன் சேர்ந்து பொறுமையாக ஒத்திகையிலும் ஈடுபடுவார்.
"எல்லோருமே அவரைப்போல் இவ்வளவு நட்பாகப் பழகுவார்களா என்பது சந்தேகம்தான். 'மாறன்' படத்தில் அவருடன் நடித்தபோது, நடிப்புக்கான பள்ளியில் உள்ள ஆசிரியர்களுடன் பழகியதுபோல் நினைக்கத் தோன்றியது," என்று சொல்லும் மாளவிகா, 'மாறன்' படத்தில் ஊடகவியலாளராக நடித்துள்ளார்.
அடிப்படையில் ஊடகத்துறையில் பட்டப்படிப்பை முடித்துள்ள அவருக்கு, புகைப்பட கலையிலும் நாட்டம் அதிகமாம். வாய்ப்பும் நேரமும் அமைந்தால் கேமராவுடன் வெளியே சுற்றத் தொடங்கிவிடுகிறார்.
"ஈரானிய திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதி இயக்கிய 'பியாண்ட் த கிளவுட்ஸ்' படத்தில் நான் 'தாரா' என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அதில் எனது நடிப்பைப் பார்த்துவிட்டுத்தான் 'பேட்ட' படத்தில் வாய்ப்புக்கொடுத்தார் கார்த்திக் சுப்புராஜ்.
"வயது வித்தியாசம் காரணமாக ரஜினி சாருக்கு தங்கையாக 'பூங்கொடி' கதாபாத்திரத்தில் நடித்தேன். ரஜினி சார் என்பதால் சின்ன கதாபாத்திரம் எனறாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதால் ஒப்புக்கொண்டேன்.
"அந்தப் படத்தில் நடித்ததால்தான் 'மாஸ்டர்', 'மாறன்' பட வாய்ப்புகள் கிடைத்தன. இப்போது தமிழில் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி உள்ளேன். தெலுங்கிலும் ஒரு பட வாய்ப்பு தேடி வந்துள்ளது," என்கிறார் மாளவிகா.
, :

