பத்து ஆண்டுகளாக கடும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார் ஆரவ். 'சிக்ஸ் பேக்ஸ்' உடற்கட்டுடன் காட்சியளிக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
'பிக்பாஸ்' போட்டியில் வெற்றிபெற்ற உடனேயே இரண்டு படங்களில் ஒப்பந்தமானார் ஆரவ்.
'மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்' படம் விமர்சன ரீதியில் வெற்றி பெறவில்லை என்றபோதிலும், அடுத்து, 'ராஜ பீமா' படத்தில் ஒப்பந்தமானார்.
"படத்தை முடித்து வெளியிடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்த நிலையில், கொரோனாவால் அனைத்தும் கெட்டுப்போனது. சரியான தேதியும் போதுமான திரையரங்குகளும் கிடைத்தால் போதும், படம் உடனே வெளியாகிவிடும்," என்று சொல்லும் ஆரவ்வுக்கு கொரோனா முடக்கநிலை பெரும் சோதனையாக அமைந்துவிட்டதாம்.
அந்தச் சமயத்தில்தான் இவரது தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவர் பார்க்கவேண்டும் என்பதற்காகவே விரைவாக திருமணம் செய்துகொண்டதாகவும் அதன்பின்னர் தந்தை இறந்துபோனதாகவும் சொல்கிறார்.
அந்த சோகத்தில் இருந்து மீண்டு வர சற்று கால அவகாசம் தேவைப்பட்டதாகச் சொல்பவர், மகன் பிறந்த பிறகு அந்த சோகம் குறைந்திருப்பதாகக் கூறுகிறார்.
"அப்பாவே எனக்கு மகனாகப் பிறந்திருப்பதாக நினைக்கிறேன். மகன் பிறந்த பிறகுதான் பழைய இயல்புக்கு மாறியுள்ளேன். இப்போது மீண்டும் புது வாய்ப்புகள் தேடி வருகின்றன. அடுத்து, மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதியுடன் ஒரு படத்தில் நடித்துள்ளேன். மேலும், ஒரு பெரிய நிறுவனம் என்னை ஒப்பந்தம் செய்துள்ளது.
"இப்போது நான் படங்களின் எண்ணிக்கை குறித்து கவலைப்படுவதாக இல்லை. நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிக்க விரும்புகிறேன்.
"மகிழ் சார் படங்கள் எப்போதுமே வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்திலும் புதுமையான அம்சங்களை வைத்துள்ளார். நானும் உதயநிதியும் எதிரெதிர் துருவங்களாக திரையில் தோன்றுகிறோம். என்னை வில்லன் என்றும் சொல்லமுடியாது, எதிர்மறை கதாபாத்திரம் என்றும் குறிப்பிட முடியாது," என்கிறார் ஆரவ்.
'பிக்பாஸ்' வெற்றிக்குப் பிறகு அவ்வப்போது மகிழ்திருமேனியைச் சந்தித்துள்ளாராம். அப்போதெல்லாம் தமக்கு வாய்ப்பு அளிக்கும்படி அவரிடம் கேட்டுள்ளார்.
இந்நிலையில், உதயநிதியை வைத்து இயக்கப்போகும் படத்துக்கான கதையை எழுதியபோது, ஆரவ் நினைவுக்கு வரவே, உடனடியாக அழைத்துப் பேசி ஒப்பந்தம் செய்துள்ளார்.
"எனினும், அந்தச் சமயத்தில் நான் ஒல்லியாக இருந்தேன். என் உடற்கட்டை மாற்றி அமைக்கவேண்டும் என்றார். ஒரு மாதம் அவகாசம் கேட்டு கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டதன் பலனாகவே இப்போது உள்ள உடற்கட்டைப் பெற முடிந்தது. அதன்பிறகு என்னைப் பார்த்தவருக்கு முழுமையான மனநிறைவு ஏற்பட்டது.
"இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், எனக்கு முன்பு பல கதாநாயகர்களிடம் இந்தப் பாத்தித்தில் நடிக்கக் கேட்டாராம். ஏதோ ஒரு காரணத்தால் யாரும் முன்வரவில்லை. அதனால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
"மகிழ் சார் படத்தில் நடிப்பது தெரிந்ததும், பல படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்புகள் தேடி வந்தன. ஆனால், எதையும் ஏற்கத் தோன்றவில்லை. 'எதற்கும் துணிந்தவன்' படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. ஆனால், மகிழ் சார் படத்துக்கான தோற்றத்துடன் வேறு படங்களில் நடிக்கமுடியாது என்பதால் அந்த வாய்ப்பை ஏற்கவில்லை," என்கிறார் ஆரவ்.
திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாகப் போய்க்கொண்டிருப்பதாகக் குறிப்பிடுபவர், மனைவியின் ஆதரவால்தான் திரையுலகில் முழுக்கவனத்தையும் செலுத்த முடிவதாகச் சொல்கிறார்.
"மகிழ் சார் படத்துக்காக தேவைப்படும் இந்த உடற்கட்டைக் கொண்டு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டேன். பிடித்த உணவுகள் எதையுமே சாப்பிட முடியாது. பால், உப்பு, சீனி சார்ந்த உணவு வகைகளைத் தொட இயலாது. ஒட்டுமொத்த உடம்பிலும் 8% கொழுப்பு மட்டுமே இருக்கவேண்டும்.
"பிரியாணி சாப்பிட முடியாமல் தவித்தேன். அப்போதெல்லாம் மனைவியின் ஆதரவும் அரவணைப்பும் பெரிய பலமாக இருந்தது. மகன் பிறந்த பிறகு கூடுதல் உற்சாகத்துடன் வேலை பார்க்கிறேன்," என்கிறார் ஆரவ்.

