'வலிமை' படத்தின் உண்மையான வசூல் என்னவென்பதை தயாரிப்பாளர் போனி கபூர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் காரசாரமான கருத்துகளை பலர் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது 62வது படத்தின் இயக்குநரை அஜித் முடிவு செய்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அநேகமாக விக்னேஷ் சிவன்தான் அப்படத்தை இயக்குவார் என்றும் நயன்தாராதான் நாயகி என்றும் கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள் தெரிவிக்கின்றனர்.
தனக்குப் பிடித்த இயக்குநர் என்றால், தொடர்ந்து வாய்ப்பு அளிப்பார் அஜித். 'சிறுத்தை' சிவாவுடன் இதுவரை நான்கு படங்களில் பணியாற்றி உள்ளார். அடுத்து ஹெச்.வினோத்துடன் மூன்றாவது முறையாக இணைகிறார்.
'அஜித் 61' படப்பிடிப்பில் அவர் பங்கேற்றாரா என்பது இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் தமது 62ஆவது படத்தை விக்னேஷ் சிவனிடம் அவர் ஒப்படைத்துள்ளதாகத் தெரிகிறது. அனிருத் இப்படத்துக்கு இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சன் பிக்சர்ஸ், லைகா, ஏஜிஎஸ் ஆகிய மூன்று முன்னணி நிறுவனங்கள் அஜித் படத்தைத் தயாரிக்க போட்டியிடுகின்றன.
விக்னேஷ் சிவன் ஏற்கெனவே அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தில் 'அதாரு அதாரு' என்ற வெற்றிப் பாடலை எழுதியிருக்கிறார். மேலும், 'வலிமை' படத்திலும் இரண்டு பாடல்கள் எழுதியுள்ளார். அதனால் அஜித் அவர் மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறாராம்.
அதேபோல் அனிருத்தும் நயன்தாராவும் ஏற்கெனவே அஜித்துடன் இணைந்து பணியாற்றி உள்ளனர். எனவே அஜித், விக்னேஷ் சிவன், நயன்தாரா, அனிருத் கூட்டணி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகக்கூடும்.