'சர்தார்' படம் குறித்து கோடம்பாக்கத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. காரணம், இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே அதன் 'ஓடிடி' உரிமை பெரிய தொகைக்கு விலைபோயிருக்கிறது.
இதனால் ஒட்டுமொத்த படக்குழுவினரும் உற்சாகத்தில் உள்ளனர். ஆனால் கார்த்தியோ அமைதியாக அடுத்தகட்ட வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையே, 'சர்தார்' படம் நேரடியாக இணையத்தில் வெளியீடு காண உள்ளதாக வெளியான தகவல் உண்மையல்ல எனத் தயாரிப்புத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது. என்ன நடந்தது?
'புஷ்பா' படப்புகழ் அல்லு அர்ஜூன் 'ஆஹா' என்ற 'ஓடிடி' நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனம்தான் 'சர்தார்' படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையைப் பெற்றுள்ளது.
இருபது கோடி ரூபாய் கொடுக்கத் தயாராக இருப்பதாக அந்நிறுவனம் கூற, மறுபேச்சின்றி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது 'சர்தார்' தயாரிப்புத் தரப்பு. இத்தனைக்கும் இறுதிக்கட்ட படப்பிடிப்புகூட இன்னும் தொடங்கவில்லை.
"சத்தமே இல்லாமல் வியாபாரத்தின் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளோம். திரையரங்கில் வெளியீடு காண்பதற்கும் முன்பே 20 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியுள்ளது என்பது தமிழ்த் திரையுலகில் புதிய சாதனை," என்கிறார் இணைத் தயாரிப்பாளர் ராஜசேகர் கற்பூரபாண்டியன்.
'சர்தார்' படத்தை கார்த்தியின் 'தேவ்' படத்தை தயாரித்த லட்சுமணன் தயாரித்து வருகிறார். இவர் கார்த்தியின் நெருங்கிய நண்பராவார்.
'இரும்புத்திரை' மித்ரன் இயக்கத்தில் உருவாகிறது 'சர்தார்' படம்.
இதில் அப்பா, மகன் என இரண்டு வேடங்களில் அருமையாக நடித்து வருகிறாராம் கார்த்தி. அவற்றுள் ஒரு கதாபாத்திரம் காவல்துறை அதிகாரி என்று கூறப்படுகிறது.
ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என இரண்டு நாயகிகள் உள்ளனர். சிம்ரன், முனீஸ் காந்த், முரளி ஷர்மா, இளவரசு எனப் பலரும் நடித்து வருகின்றனர்.
இரண்டுகட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்துவிட்டு, மூன்றாம் கட்ட படப்பிடிப்பை மைசூரில் நடத்தி உள்ளனர்.
"இந்தப் படம் நேரடியாக இணையத்தில் வெளியாவதாகக் கூறப்படுவது தவறு. படத்தை அறுபது கோடி ரூபாய் செலவிட்டு உருவாக்கி வருகிறோம். அதை இருபது கோடி ரூபாய்க்கு விற்க முடியுமா?
"ஓடிடி வெளியீட்டுக்கு மட்டுமே இந்தத் தொகை பேசப்பட்டுள்ளது. படம் திரையரங்கில் வெளியாகி மூன்று அல்லது நான்கு வாரங்கள் முடிந்த பிறகே ஓடிடியில் வெளிவரும். எனவே படத்தின் வியாபாரம் தொடங்கி உள்ளது என்பது மட்டுமே சரி. இன்னும் இசை உரிமை, செயற்கைக்கோள் உரிமை எனப் பல்வேறு உரிமைகளை விற்க வேண்டியுள்ளது. இந்த வியாபாரம் மூலம் வரக்கூடிய தொகைகளையும் சேர்க்க வேண்டும்," என்கிறது 'சர்தார்' படத்தின் தயாரிப்புத் தரப்பு.
எதிர்வரும் ஏப்ரலில் 'சர்தார்' படப்பிடிப்பை முடித்துவிட்டு, அடுத்து ராஜு முருகன் இயக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார் கார்த்தி.
இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் 'பொன்னியின் செல்வன்' பட வேலைகள் மீண்டும் தொடங்கி இருப்பதை அடுத்து, அதிலும் கவனம் செலுத்துகிறாராம்.
இந்தப் படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும் அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர்.
பெரும்பாலான காட்சிகளை தாய்லாந்தில் படமாக்கிய நிலையில், படத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் சில காட்சிகளை மும்பையில் படமாக்கி வருகின்றனர்.
"வந்தியத்தேவன் கப்பலில் இருந்து கடலில் குதித்து தப்பும் காட்சியை கடலுக்கு அடியில் படமாக்க வேண்டியுள்ளது. அதற்கான அனுமதியை சில தினங்களுக்கு முன்புதான் மகாராஷ்டிர மாநில அரசு வழங்கியதாம்.
அதற்கான படப்பிடிப்பு தொடங்கியதை அடுத்து கார்த்தியும் ஜெயம் ரவியும் மும்பையில் முகாமிட்டுள்ளனர்.
படத்தின் நாயகிகளில் ஒருவரான ஐஸ்வர்யா ராய் சம்பந்தப்பட்ட காட்சிகளை யும் வேகமாகப் படமாக்கி வருகிறாராம் மணிரத்னம். இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் கார்த்தியின் முதன்மை விருப்பம். எனினும் காலம் அவரை நடிகராக மாற்றி உள்ளது.
மணிரத்னத்தி டம் உதவி இயக்குநராகப் பணியாற்றி உள்ளார். இந்நிலையில், தனது குருநாதருடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதன் மூலம் திரைப்பட இயக்கம் தொடர்பான பல விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடிகிறது என்கிறார்.
"அதிலும், 'பொன்னியின் செல்வன்' பட அனுபவத்தை மறக்கவே இயலாது. மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளத்தைக் கையாள்வது எல்லா இயக்குநர்களுக்கும் சாத்தியமானதல்ல. இயக்கம் தொடர் பான அனைத்து நுணுக்கங்களை யும் அறிந்தவருக்கு மட்டுமே இது சாத்தியம். மணிரத்னம் அப்படிப்பட்ட இயக்குநர்," எனப் பாராட்டுகிறார் கார்த்தி.
, :

