பிரபல கர்நாடக இசைப்பாடகி பெங்களூரு நாகரத்தினம்மாளின் வாழ்க்கை திரைப்படமாகிறது. இதில் கதாநாயகியாக அனுஷ்காவை ஒப்பந்ததம் செய்துள்ளனர்.
90 வயதான இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவ் இயக்குகிறார். இவர் கமல்ஹாசன் நடித்த 'அபூர்வ சகோதரர்கள்', 'மைக்கேல் மதன காமராஜன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
நாகரத்தினம்மாளின் மூதாதையர்கள் மைசூரு அமைச்சரவைப் பாடகர்களாக இருந்தவர்கள். திருவையாறு ஆராதனை நிகழ்வில் பெண் இசைக்கலைஞர்களுக்குப் பாட வாய்ப்பு கிடைக்காத நிலைமை இருந்தது. அதை மாற்றி, பெண் இசைக் கலைஞர்களுக்கும் அந்நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுக் கொடுத்தவர் நாகரத்தினம்மாள்.
இவரது வாழ்க்கை வரலாற்றை தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் படமாக்க உள்ளனர்.
நாகரத்தினம்மாளாக நடிக்க முதலில் சமந்தாவைத்தான் அணுகினராம். ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் அவர் ஒதுங்கிக்கொள்ள அனுஷ்காவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தாம் இயக்கியுள்ள 'பயணி' என்ற இசைத்தொகுப்பை வெளியிட்டுள்ளார் ரஜினி மகள் ஐஸ்வர்யா. அனிருத் இசையமைக்க, விவேகா பாடல் எழுதியுள்ளார்.
நேற்று முன்தினம் இந்த இசைத்தொகுப்பை வெளியிட்ட ஐஸ்வர்யாவுக்கு ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் தனுஷ், "பயணி இசைத் தொகுப்பை இயக்கியுள்ள தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிப்பார்," என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். ஐஸ்வர்யா தமது டுவிட்டர் பக்கத்தில் தம் பெயரை 'ஐஸ்வர்யா தனுஷ்' என்றே குறிப்பிட்டுள்ளார். அப்படி இருக்கும்போது, அவரை தனுஷ், 'தோழி' என்று குறிப்பிட்டிருப்பதை ரசிகர்கள் விமர்சித்துள்ளனர். இந்நிலையில், தனுஷின் பதிவுக்கு, "நன்றி தனுஷ்" என்று பின்னூட்டமிட்டுள்ளார் ஐஸ்வர்யா.
'கா' என்ற படத்தில் ஆண்ட்ரியா புகைப்படக் கலைஞராக நடித்துள்ளார். இதில் ஏராளமான சண்டைக் காட்சிகள் உள்ளனவாம்.
அவற்றில் அசத்தலாக நடித்துள்ளதாகப் பாராட்டுகிறார் படத்தின் இயக்குநர் நாஞ்சில். பெரும்பாலான காட்சிகளை வனப்பகுதியில் படமாக்கி உள்ளனர். இந்தப் படம் ஆண்ட்ரியாவுக்குப் புதிய அடையாளத்தை தரும் என்று படக்குழுவினர் கூறுகின்றனர்.

