ஹன்சிகாவின் ஐம்பதாவது படமான 'மஹா' இன்னும் வெளியீடு கண்டபாடில்லை.
அப்படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையே மோதல் என்றும் பணப்பிரச்சினை என்றும் பல்வேறு விதமான தகவல்கள் வெளிவருகின்றன.
இந்நிலையில், மனம் வெறுத்துப்போன ஹன்சிகா, தாமே அப்படத்தை இயக்க முடிவு செய்துள்ளதாகவும்கூட கூறப்பட்டது. ஆனால், இது குறித்து கேட்டால், படம் வெளியாகாத சோகத்தையும் மீறி வாய்விட்டுச் சிரிக்கிறார் ஹன்சிகா.
"நான் இயக்குநராகிவிட்டேனா? இந்த ஆண்டின் ஆகச்சிறந்த நகைச்சுவை இதுதான். எனக்கு நடிப்பு மட்டுமே தெரியும். ஒரு படத்தை இயக்குவது சாதாரண விஷயமல்ல.
"ஒவ்வொரு படத்துக்கும் என ஒரு தலைவிதி இருக்கும். என்னைப் பொறுத்தவரை 'மஹா' அருமையான படமாக உருவாகி இருக்கிறது. படம் முழுமையாக தயாராகி இருப்பதால் எந்த நேரத்திலும் வெளியிட முடியும்.
"எனது ஐம்பதாவது படம் இப்படிச் சிக்கலில் இருப்பது நிச்சயம் வருத்தம் அளிக்கிறது. இப்போது 55வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன்," என்கிறார் ஹன்சிகா.
இயக்குநராகும் ஆசை தமக்கு அறவே இல்லை என்று குறிப்பிடுபவர், தமக்கு சின்னச்சின்ன ஆசைகள் இருப்பதாகவும் அவை எல்லாம் நிறைவேறினாலே போதும் என்றும் பக்குவமாகப் பேசுகிறார்.
கடந்த 2010ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமான இவருக்கு இப்போதுதான் வித்தியாசமான கதாபாத்திரங்களும் கதைகளும் தன்னைத் தேடி வருகின்றனவாம். இனி நல்ல கதைக்களங்களில் மட்டுமே நடிப்பது எனவும் முடிவு செய்துள்ளாராம்.
"ஆண்டுகளைக் கடக்கும்போது அனுபவம் நம்மைப் பக்குவப்படுத்தும். பயிற்சியும் திறமையும் கூடும்.
"அதன் பலனாக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தும்போது நல்ல கதாபாத்திரங்கள் தன்னால் தேடி வரும்.
"இப்போது இயக்குநர்கள் என் மீது கூடுதல் நம்பிக்கை வைத்திருப்பதாகக் கருதுகிறேன். என்னை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைத்தால் என்னால் அவற்றைச் சுமக்க முடியும் என நம்புகிறார்கள். அதற்காக இதுவரை நான் நடித்த கதாபாத்திரங்களைக் குறைவாக மதிப்பிடவில்லை. அவற்றையும் நல்ல வாய்ப்புகளாகவே மதிப்பிடுகிறேன்," என்கிறார் ஹன்சிகா.
தற்போது ஓடிடி தயாரிப்புகளிலும் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் ஹன்சிகா.
ஓடிடி தளங்கள் அறிமுகமான பிறகு திரைஉலகத்துக்குப் புதிய வேகம் வந்திருப்பதாகக் குறிப்பிடுபவர், தற்போது ஏழு திரைப்படங்கள், இணையத் தொடர்களில் நடித்து வருகிறார்.
அனைத்துமே ஒன்றுக்கொன்று மாறுபட்ட கதைக்களங்களைக் கொண்டிருப்பதாகவும் சொல்கிறார்.
"ஓடிடி தளங்கள் வந்த பிறகு, திரையுலகில் நடிகைகளுக்கு உள்ள முக்கியத்துவம் நிச்சயம் அதிகரித்துள்ளது. பல்வேறு கதாபாத்திரங்களும் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கின்றன.
"சில ஆண்டுகளுக்கு முன்பு கதாநாயகியின் நிலை எப்படி இருந்ததோ, அதற்கு நேர்மாறான நிலை காணப்படுகிறது. பெண்களை மையப்படுத்தும் கதைகள் அதிகரித்துள்ளன. அந்த வகையில் நடிகைகளுக்கு இது ஆகச்சிறந்த காலகட்டம்," என்று சொல்லும் ஹன்சிகா, தன்னைப் பற்றி சிலர் விமர்சனம் செய்வதை நன்கு அறிந்துள்ளாராம்.
நியாயமற்ற விமர்சனங்களை அறவே கண்டுகொள்வதில்லையாம்.
"என்னைப் பொறுத்தவரை இப்போது இந்த நொடியில் வாழ்ந்து கொண்டிருப்பதுதான் நிஜம்.
"எனவே, எந்தவொரு தருணத்திலும் உங்கள் மனம் என்ன நிலையில் இருந்தாலும் ஆழமாக சுவாசியுங்கள். அதனூடே எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்று நினையுங்கள்.
"விதி நமக்கு நல்லதொரு பாதையை வகுத்து வைத்திருக்கும் என்று நம்புங்கள்," என்று தத்துவார்த்தமாகப் பேசும் ஹன்சிகா, கடந்த கால மோசமான அனுபவங்கள், பிரச்சினைகள் குறித்து பேசுவதை தெளிவாகத் தவிர்க்கிறார்.
ஹன்சிகா மோத்வானி
, :

