பல்வேறு தோல்விகளைச் சந்தித்த பிறகே தம்மால் முன்னணி கதாநாயகி என்ற இடத்தை அடைய முடிந்தது என்கிறார் பூஜா ஹெக்டே.
ரசிகர்களை மகிழ்விப்பதுதான் தமது சாதனை என்றும் அதைவிட வேறு எதுவும் தமக்குப் பெரிதாகத் தெரியவில்லை என்றும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"ஒரு காலத்தில் நிறைய தோல்விகளைச் சந்தித்துள்ளேன். ஆனால் அதை நினைத்து கவலைப்பட்டதில்லை. நான் பொழுதுபோக்குத் துறையில் பணியாற்றுகிறேன். அதனால் நமது சொந்தக் கவலைகளை வெளிப்படுத்தக்கூடாது.
"ரசிகர்களை மகிழ்விப்பதற்காகவே எனது நேரத்தைச் செலவிடுகிறேன். அதில் வெற்றிபெற வேண்டும் என்பது மட்டுமே என் மனதில் மேலோங்கி நிற்கும்.
"ரசிகர்களைப் பற்றி நினைத்தாலே உற்சாகமாகிவிடுவேன். மனதுக்குள் புதிய தெம்பு புகுந்து விட்டதுபோல் உணரத் தோன்றும்.
"தனிப்பட்ட கஷ்டம், தோல்வி, நெருக்கடி எல்லாம் மறைந்துவிடும். அதன் பிறகு நடனம், நடிப்பு என்று எதுவாக இருந்தாலும் எளிதாக இருக்கும்," என்கிறார் பூஜா.
ஏராளமான தோல்விகளைச் சந்தித்து இருப்பதால், பெரிய வெற்றியைக்கூட தாம் ஒரு பொருட்டாகக் கருதியதில்லை என்று சொல்பவர், கடந்த ஓராண்டாக பெரிய வாய்ப்புகள் தேடி வருவது மனநிறைவைத் தருவதாகக் குறிப்பிடுகிறார்.
"முதல் நிலை நடிகை என்ற தகுதியைப் பெற வேண்டும் என்ற ஆசையோ இலக்கோ எனக்கு இல்லை. அந்த எண் விளையாட்டு என்பது வெறும் மாயை. மக்களின் விருப்பமும் சந்தைச் சூழலும் மாறிக்கொண்டே இருக்கும். இறுதியில் நல்ல நடிகை என்ற பெயர்தான் நிலைக்கும். அதுதான் எனது இலக்கு.
"மேலும், முதல் நிலை நடிகை என்ற பெயரை விட, இன்றைய இளம் பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். எனது முயற்சிகள் அதை நோக்கியே உள்ளன. அதற்கு ஏற்ற படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன்," என்று சொல்லும் பூஜாவும் நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடிக்கத் தயாராகிவிட்டாராம்.
தாம் மட்டுமல்ல, பல கதாநாயகிகள் இப்போது பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்து வருவதாகக் குறிப்பிடுபவர், அவற்றுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாகச் சொல்கிறார்.
"ஆனால் கதாநாயகர்கள்தான் இன்னும் மாறவே இல்லை. இப்போதும் கூட நாயகிகள் இல்லாத படங்களில் நடிக்க அவர்கள் தயாராக இல்லை. ரசிகர்களின் ரசனைக்கேற்ப திரைஉலகம் தன்னை மாற்றிக்கொள்ளும். அப்போது அதில் பணியாற்றும் கலைஞர்களும் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்.
"இன்றுள்ள இளம் நடிகைகள் இதை நன்கு புரிந்துவைத்துள்ளனர். என்னைப் பொறுத்தவரை நல்ல கதை அமைந்தால் நாயகியை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடிக்கத்தயார்.
"சமூக ஊடகங்களில் பலர் இதுதொடர்பாகப் பதிவிட்டுள்ளனர். அவற்றைப் படிக்கும்போது, ரசிகர்களுக்காகவாவது தனி நாயகி உள்ள கதைகளில் நடிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவர்கள்தான் எனக்கு முக்கியம். இந்திய அளவில் அறியப்படும் நடிகையாக வேண்டும் என்பதே எனது கனவு. தமிழில்தான் முதலில் அறிமுகமானேன். அதன் பிறகு ஓர் இடைவெளி ஏற்பட்டு, மீண்டும் நடிக்க வந்துள்ளேன்.
"இந்த இடைவெளியை சிலர் எதிர்மறையாகப் பார்க்கிறார்கள். மீண்டும் நடிக்க வரும்போது எத்தகைய வாய்ப்புகள் அமைகின்றன என்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அதையும் நேர்மறையாகவே பார்க்கிறேன்.
"இத்தகைய அணுகுமுறைதான் என்னை இதுநாள் வரை திரையுலகில் நீடிக்க வைத்துள்ளது. பல பெரிய இயக்குநர்கள் அடுத்தடுத்த படங்களில் என்னை ஒப்பந்தம் செய்யவும் இதுவே காரணமாக இருக்கக்கூடும்," என்று தன்னம்பிக்கையுடனும் தெளிவாகவும் பேசுகிறார் 'பீஸ்ட்' பட நாயகி பூஜா ஹெக்டே.

