இந்தியில் முன்னணி கதாநாயகர்கள் தம்மை நிராகரித்ததாகவும் எனினும் தாம் அதுகுறித்து வருத்தப்படவில்லை என்றும் கூறுகிறார் நடிகை வித்யா பாலன்.
திரையுலகத்துக்கு நல்ல கதைகள்தான் ஆன்மா போன்றவை என்றும் அப்படிப்பட்ட கதைகளைத்தான் தாம் விரும்புவதாகவும் சொல்கிறார்.
"பல முன்னணி நடிகர்கள் என்னை ஒதுக்குவதாக உணர்ந்தேன். அதற்காக எனது விருப்பங்களையும் அதற்காக எதிர்கொள்ளும் போராட்டத்தையும் கைவிட இயலாது.
"இவ்வாறு முடிவு செய்ததும் நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினேன். எனது முடிவு வீண்போகவில்லை. நான் நடித்த பல படங்கள் எனக்கான நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன. ரசிகர்களும் என்னை ஏற்றுக்கொண்டனர்," என்கிறார் வித்யா.
நடிக்க வந்த புதிதில் தாம் எதிர்கொண்ட சில மோசமான அனுபவங்களை மறக்கவே இயலாது என்று குறிப்பிடுபவர், அச்சமயம் 13 படங்களில் இருந்து தாம் அடுத்தடுத்து நீக்கப்பட்டதாக நினைவுகூர்கிறார்.
"அதிலும் குறிப்பிட்ட ஒரு படத்தில் இருந்து என்னை நீக்கிய தயாரிப்பாளர், அதன் பிறகு என்னிடம் மிக மோசமான முறையில் நடந்து கொண்டார். நான் மிகவும் அசிங்கமானவள் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தினர். என்னைப் பற்றி நானே அவ்வாறு நினைக்கும்படி செய்தனர்.
"அதன் காரணமாக முகக் கண்ணாடி பயன்படுத்துவதைத் தவிர்த்தேன். கண்ணாடியில் என்னைப் பார்ப்பதற்கான துணிச்சல் வர ஆறு மாதங்கள் தேவைப்பட்டன. ஆனால் அன்று, நீ வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிய அதே தயாரிப்பாளர்களிடம் இருந்து இப்போது தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.
"அவர்கள் தயாரிக்கும் படங்களுக்காக எனது கால்ஷீட் தேவைப்படுவதாகச் சொல்கின்றனர். ஆனால் அந்த வாய்ப்புகளை ஏற்க மாட்டேன் என்பது ரசிகர்களுக்கு நன்கு தெரியும்," என்கிறார் வித்யா பாலன்.
பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பாலச்சந்தர் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தாராம். படப்பிடிப்புக்காக நியூசிலாந்து புறப்பட இருந்த நிலையில், படத்தில் இருந்து நீக்கப்பட்டதை அறிந்தாராம்.
"படக்குழுவைச் சேர்ந்த ஒருவர்கூட என்னிடம் விவரம் தெரிவிக்கவில்லை. பயணத்துக்கு முன்பு சில விவரங்களைக் கேட்டறிவதற்காக என் தாயார் தொடர்பு கொண்டபோதுதான் தகவல் தெரிந்தது.
"இதனால் ஆத்திரமடைந்து மும்பை நகரச் சாலைகளில் மணிக்கணக்கில் வெயிலில் நடந்து சென்றேன். மும்பை கடலோரத்தில் அமர்ந்து கதறி அழுதேன். அந்த நினைவுகள் என்றும் என் மனதை விட்டு நீங்காது. அனைத்தையும் கடந்து இன்று ரசிகர்களின் மனத்தில் இடம்பிடித்துள்ளேன். எனக்கு அதுபோதும்," என்கிறார் வித்யா பாலன்.
இவர் நடித்துள்ள 'ஜல்சா' திரைப்படம் கடந்த 18ஆம் தேதி வெளியாகி உள்ளது.