'எஃப்ஐஆர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்து நடிக்க உள்ள படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார் விஷ்ணு விஷால். அவர் நடிப்பில் உருவாகும் 'மோகன்தாஸ்' படம் வேகமாக வளர்ந்து வருகிறது.
முரளி கார்த்திக் இயக்கும் இந்தப் படத்துக்காக தனது உடல் மொழியில் பல மாற்றங்களைக் கொண்டு வரவேண்டி இருந்ததாகச் சொல்கிறார் விஷ்ணு.
"உதாரணத்துக்கு, இப்படம் முழுவதும் நான் கண்ணாடி அணிந்திருக்க வேண்டும். நான் இதுவரை குளிர்கண்ணாடி மட்டுமே அணிந்துள்ளேன். அதனால் பார்வைக் குறைபாட்டுக்கான கண்ணாடியை அணிவதில் சிரமம் ஏற்பட்டது.
"எனவே உண்மையான தேவைக்காக முகக்கண்ணாடி அணிபவர்களை சில நாள்கள் கவனித்தேன். அவர்கள் எப்படி கண்ணாடியைக் கையாள்கிறார்கள், எப்போது அதை, எதற்காகக் கழற்றுகிறார்கள், எப்படி சுத்தம் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.
"கண்ணாடியின் உதவியோடு நம் மன உணர்வுகளைப் பலவிதமாக வெளிப்படுத்த முடியும். உதாரணமாக, அதை வேகமாக பின்னுக்கு நகர்த்தினால் கோபம் என்று அர்த்தம். கண்ணாடியின் ஃபிரேம் பகுதியை இரு விரல்களால் பிடித்துக் கொண்டால் நாம் ஏதோ சிந்திப்பதாக எதிரில் இருப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.
"ஆனால் இதை மனத்திற்கொண்டு நடிக்கும்போது, அது இயல்பாக இருக்க வேண்டும். நடிப்புக்காகச் செய்கிறோம் என்பதை ரசிகர்கள் புரிந்துகொண்டால் நம் நடிப்பு எடுபடாமல் போய்விடும்," என்கிறார் விஷ்ணு விஷால்.
என்னதான் கவனமாகச் செயல்பட்டாலும், கண்ணாடி அணிந்துகொண்டு சண்டைக் காட்சிகளில் நடிப்பது மிகவும் ஆபத்தானது என்று சொல்பவர், இயக்குநர் அளித்த தைரியத்தால் அவற்றில் நடித்ததாகக் கூறுகிறார்.
"ஒரு குறிப்பிட்ட சண்டைக்காட்சியில் எதிரிகள் என்னை முகத்தில் தாக்கும்போது, என் கண்ணாடி நொறுங்கிவிடும். எனினும் எனது கதாபாத்திரத்திற்கு கண்ணாடியைக் கழற்றினால் எதிரில் உள்ள எதுவுமே தெளிவாகத் தெரியாது என்பதால், அதைக் கழற்றாமல் எதிரிகளுடன் மோத வேண்டியிருந்தது.
"சற்றே கவனக்குறைவாக இருந்தாலும், உடன் நடிக்கும் சண்டைக் கலைஞர்கள் நடிப்புக்காக விடும் குத்து என் முகத்தை வீங்கச் செய்துவிடும். இந்தப் பயம் மனதுக்குள் இருந்தாலும் அதை வெளிப்படுத்திக் கொள்ளாமல் சமாளிக்க முயன்றேன்.
"நான் பிறரைத் தாக்கும்போதும் ஓடும்போதும் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. எப்படியோ, அந்தக் காட்சிகள் இயல்பாகவும் நன்றாகவும் படமாக்கப்பட்டுள்ளன," என்று சொல்லும் விஷ்ணு விஷால், இந்தப் படத்தில் தாம் வசனம் பேசும் விதமும் மாறுபட்டதாக இருக்கும் என்கிறார்.
அதிகமாக பயப்படும் இளைஞர் எப்படிப் பேச வேண்டும் என்பது குறித்து இயக்குநர் முரளியுடன் விரிவாக ஆலோசித்தாராம். முதலில் வசனங்களை மெதுவாக, நிதானமாகப் பேசுவது என்று முடிவு செய்துள்ளனர். பிறகு அவ்வாறு இழுத்தடித்துப் பேசினால் படத்தின் நீளம் அதிகமாகி, ரசிகர்களுக்கு போரடிக்கும் என்று தோன்றவே, வசனங்களின் தன்மைக்கேற்ப வேகம், நிதானம் என்பதை முடிவு செய்துகொள்வது என்று முடிவெடுத்துள்ளனர்.
"இந்தப் படத்தில் நடிகர் இந்திரஜித் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவரது நடிப்பு என்னை அசர வைத்துள்ளது. ஒரு காட்சியில் அவர் உணர்வுபூர்வமாக நடித்த தைக் கண்டு, நான் பேச வேண்டிய வசனத்தை மறந்துவிட்டேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
"வசனம் பேசுவதில் தொடங்கி, தோற்றம், உடல்மொழி எனப் பலவிதமான மெனக்கெடல்கள் தேவைப்பட்டன. அவை அனைத்திலும் எந்தவித குறையும் வைக்காமல் உழைத்திருக்கிறேன். எனவே 'ராட்சசன்' படத்துக்குப் பிறகு 'மோகன்தாஸ்' எனக்கு மற்றொரு வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது," என்கிறார் விஷ்ணு விஷால்.
'மோகன்தாஸ்' படத்தின் குறு முன்னோட்டக் காட்சித் தொகுப்பில், 'இன்று நீ என்ன செய்கிறாய் என்பதே எதிர்காலத்தை தீர்மானிக்கும்' என்ற வரி இடம்பெற்றுள்ளது.
"இது உண்மைக்கதையை மட்டுமே தழுவி எடுக்கப்பட்ட படம் என்று கூறி இயலாது. படத்தில் இடம்பெற்றுள்ள சில சம்பவங்கள் சிலரது வாழ்க்கையில் நடந்தவையாக இருக்கலாம். எனவேதான் முன்னோட்டத்தின் முடிவில், இது உண்மைக் கதையாகவும் இருக்கக்கூடும் என்ற வரி இடம்பெற்றுள்ளது," என்கிறார் இயக்குநர் முரளி கார்த்திக்.

