"என் வாழ்க்கையைத் திரைப்படமாக எடுக்க நடிகர் மாதவன்தான் பொருத்தமானவர்," என்று முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் கூறியுள்ளார்.
இவரது வாழ்க்கையைச் சித்திரிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது 'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட்' திரைப்படம்.
எதிர்வரும் ஜூலை 1ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இதன் முன்னோட்டக்காட்சித் தொகுப்பை துபாயில் வெளியிட்டனர்.
அதில் கலந்துகொண்டு பேசிய விஞ்ஞானி நம்பி நாராயணன், தமது வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க பலர் முன்வந்ததாகக் குறிப்பிட்டார்.
"ஆனால் பொறியியல் துறைசார் அறிவின் சாராம்சத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய ஒருவரால் என் கதை சொல்லப்பட வேண்டும் என நான் விரும்பினேன். அந்த வகையில், மாதவன் ஒரு பொறியாளர் என்பதால், என் கதையை அவரிடம் சொல்வது எனக்கு மிக எளிதாக இருந்தது.
"ஒரு ராக்கெட் விஞ்ஞானி, உண்மையின் பாதையில் செல்ல வேண்டும் என்பதுதான் இந்தப் படத்தின் கருத்து. உங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், சோர்ந்து போய்விடக்கூடாது. நீதி கிடைக்கும் வரை போராட வேண்டும் என்ற செய்தியை இளைஞர்களுக்கு இந்த படம் தெரிவிக்கும்," என்றார் நம்பி நாராயணன்.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றியபோது உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்ட இவர், பல ஆண்டுகள் நீடித்த சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டார்.

