"அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் எனக்கான பயணம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை ஓரளவு கணித்துள்ளேன்," என்கிறார் கமல் மகள் அக்ரஷா ஹாசன்.
முதன்முறையாக நகைச்சுவையான கதாபாத்திரத்தில் நடித்தது மறக்க இயலாத, சவாலான அனுபவம் என்கிறார்.
'கடாரம் கொண்டான்', 'விவேகம்', இந்தியில் 'ஷமிதாப்' என விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் மட்டுமே நடித்துள்ள அக்ஷராவுக்கு திரையுலகம் சார்ந்த எதிர்பார்ப்புகள் அதிகம் உள்ளன.
'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படத்தின் தலைப்பு மட்டுமல்லாமல், அதன் முதல் தோற்றச் சுவரொட்டி, முன்னோட்டக் காட்சித் தொகுப்பு என பலவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அமைந்துள்ளன. அவற்றைப் பார்த்த பலரும் அக்ஷராவைத் தொடர்பு கொண்டு வாழ்த்தியதோடு, மறக்காமல் படத்தின் கதை குறித்தும் இவரது கதாபாத்திரம் பற்றியும் விசாரித்துள்ளனர்.
"கதைப்படி நான் அப்பாவிப் பெண்ணாக நடித்துள்ளேன். அதுமட்டுமல்ல, நகைச்சுவைப் பகுதிகளிலும் கவனம் செலுத்தி உள்ளேன். நம்ம ஊர் பொண்ணு என்று சொல்வார்கள் அல்லவா, அப்படியும் காட்சி அளிப்பேன்.
"படத்தின் கதையைக் கேட்டபோது மிகவும் சுவாரசியமாக இருந்தது. தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட கதையை யாரும் விரிவாகக் கையாண்டதாகத் தெரியவில்லை. வலுவான கதை, திரைக்கதை.
"மேலும், கதையை நகைச்சுவை கலந்து விறுவிறுப்பாக நகர்த்திச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது புரிந்தது. சமூகத்துக்குத் தேவையான நல்ல கருத்தைச் சொல்லி இருக்கிறார்கள் என்பதுடன் கவனமாகவும் செயல்பட்டுள்ளனர்.
"எனது தனிப்பட்ட வாழ்க்கையில் சில தருணங்களை இந்தப் படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, கச்சிதமாகப் பொருந்தியது," என்று சொல்லும் அக்ஷரா, நகைச்சுவைக் காட்சிகளில் நடிப்பது பெரும் சவாலாக இருந்தது என்கிறார்.
இயக்குநர் சொன்னபடி நடித்ததால் சமாளிக்க முடிந்ததாம். எனினும் இந்த அனுபவம் தாம் திரையுலகில் நீடிக்கும்வரை மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்கிறார்.
முழு நேர நடிகையாகிவிட்டீர்கள். குடும்பத்தார் ஒத்துழைப்பு எப்படி உள்ளது?
"வீட்டில் அப்பா, அம்மா, அக்கா என்று மூவரிடமும் வெளிப்படையாகப் பேசுவேன். யாருக்கு நேரம் இருக்கிறதோ, அதை உறுதி செய்துகொண்டு நானே தொடர்பு கொள்வேன்.
"மூன்று பேருமே இன்றுவரை எனக்கு ஆதரவாகத்தான் உள்ளனர். ஒரு நடிகையாக இந்தப் படம் எனக்கு ரொம்ப முக்கியம். காரணம், நான் எந்த மாதிரியான நடிகையாக முயற்சி செய்ய வேண்டும் என்பதைப் புரிய வைத்திருக்கிறது. என் மனதில் நம்பிக்கையை விதைத்து, நல்லபடியாக வளர்த்திருக்கிறது," என்கிறார் அக்ஷரா.
இந்தப் புதிய படத்தில் பிரபல பின்னணிப் பாடகி உஷா உதுப் இவரது பாட்டியாக நடித்துள்ளார். தமக்கு ஐந்து வயதானபோது உஷாவை நேரில் சந்தித்தாராம் அக்ஷரா. அப்போது முதலே அவருடன் நெருக்கம் பாராட்டி வந்துள்ளாராம்.
"படப்பிடிப்பின்போது தன் வீட்டுப் பெண்ணைப் போல் என்னை அக்கறையுடன் பார்த்துக்கொண்டார். இந்த வயதிலும் ஏதாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் உள்ளது. நான் பார்த்த பெண்களில் மிகவும் தன்னம்பிக்கையான, மாய சக்தியும் திறமையும் உள்ள பெண்மணி. அவரிடம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன," என்கிறார் அக்ஷரா.
'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு' படம் நேரடியாக இணையத்தில் வெளியீடு காண்கிறது. அந்தத் தேதிக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறாராம்.
அது மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தன் பெற்றோர், அக்கா ஆகிய மூவருடன் ஒரே நேரத்தில் படம் பார்க்கத் திட்டமிட்டுள்ளாராம் அக்ஷரா.

