தெலுங்கு திரையுலகில் இருந்து ஆண்டுக்கு பத்து கதாநாயகிகளாவது கோடம்பாக்கத்துக்கு இறக்குமதி ஆகிவிடுவர். கொரோனா விவகாரம் கட்டுக்குள் வந்திருப்பதை அடுத்து, இந்த இறக்குமதிப் படலம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.
ராஷ்மிகா, பூஜா ஹெக்டே, கீர்த்தி ஷெட்டி ஆகியோரின் வரிசையில் தமிழ்த் திரையுலகில் அடுத்து களமிறங்கப் போகிறார் ஸ்ரீலீலா.
விஜய்யின் அடுத்த படத்தில் ராஷ்மிகாதான் நாயகி. பூஜா ஹெக்டேவைப் பொறுத்தவரை 'பீஸ்ட்' பட வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.
சூர்யாவின் அடுத்த படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தனுஷுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக ஒரு தகவல் உலா வருகிறது.
ராஷ்மிகா, பூஜா ஹெக்டே, கீர்த்தி ஷெட்டி, ஸ்ரீலீலா ஆகிய நால்வருமே கர்நாடகாவைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்திருந்த நிலையில், தெலுங்கு சினிமா ஸ்ரீலீலாவை வரவேற்று அரவணைத்தது.
'பெல்லி சண்டாடி' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமான அவருக்கு, வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. ரவி தேஜாவுக்கு ஜோடியாக 'தமாகா' படத்தில் நடித்து வருபவர், அடுத்து பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக ஒப்பந்தமாகி உள்ளார்.
ஸ்ரீலீலாவுக்கு இப்போதுதான் 20 வயதாகிறது. மருத்துவம் படித்து வருகிறார்.
ஒரு பக்கம் வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்க, இவரோ கால்ஷீட் ஒதுக்க முடியாமல் தடுமாறுகிறார். காரணம், ஒரே சமயத்தில் படிப்பையும் நடிப்பையும் கையாள்வது சவாலாக இருக்கிறதாம்.
"என்னை நேரில் சந்திக்கும் நலன்விரும்பிகள் அனைவருமே படிப்பு குறித்துதான் விசாரிப்பார்கள். அவர்களிடம் எனக்கு எல்லாம் பழகிவிட்டது என்று பதில் சொல்கிறேன். ஆனால், உண்மையில் ஒவ்வொரு நாளும் சவாலானதாக அமைகிறது. "படப்பிடிப்புக்குச் செல்லும்போது பாடப்புத்தகங்களையும் சுமக்கிறேன். சிறிது நேரம் ஓய்வு கிடைத்தாலும் பாடங்களைப் படிக்கிறேன்.
"இந்த விஷயத்தில் எனக்கு முன்மாதிரியாக சிலர் உள்ளனர் என்பதில் நம்பிக்கை அளிக்கிறது. நடித்துக்கொண்டே அவர்கள் படிப்பையும் வெற்றிகரமாக முடித்துள்ளனர்," என்கிறார் ஸ்ரீலீலா.
இவரைப் போல் மருத்துவம் படிக்கும் சாய் பல்லவி, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரைத்தான் முன்மாதிரி என்று குறிப்பிடுகிறார். இருவரையும் நேரில் சந்தித்து சில அறிவுரைகளைப் பெற வேண்டும் என்றும் விரும்புகிறாராம்.
எந்தக் காரணத்தை முன்னிட்டும் தம்மால் நடிப்பு, படிப்பு ஆகிய இரண்டையும் கைவிட முடியாது என்று குறிப்பிடுபவர், மருத்துவப் படிப்பை முடித்ததும் மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் சொல்கிறார். தமிழில் முன்னணி நாயகர்களுடன் நடிக்க விரும்புவதாகக் கூறும் ஸ்ரீலீலா, தமக்கு விருப்பமான நாயகர்கள் என்று பெரிய பட்டியலே வைத்துள்ளார். எனினும், தெலுங்கில் முன்பே ஒப்புக்கொண்டுள்ள படங்களை முடிக்க வேண்டியது தனது கடமை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

