காலஞ்சென்ற இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பாலக்காடு பகுதியில் நினைவிடம் கட்ட ஒரு கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது கேரள அரசு. இந்நிலையில், தமது தந்தையின் இசைச் சேவை உரிய வகையில் அங்கீகரிக்கப்பட வில்லை என்கிறார் எம்.எஸ்.வி. மகள் லதா.
சுமார் எழுநூறுக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள எம்.எஸ்.வி.க்கு இந்திய அரசின் பத்ம விருதுகள் அவர் வாழும்வரை அறிவிக்கப்படவே இல்லை என்று வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறார்.
"என் தந்தையின் திறமை குறித்து எங்கள் குடும்பத்தினரைவிட, ரசிகர்களைவிட, அவருடன் இணைந்து பணியாற்றிய திரையுலக, அரசியல் பிரமுகர்கள் பலருக்கு நன்றாகத் தெரியும். எனினும் அவரது திறமைக்கு நியாயமாக கிடைத்திருக்க வேண்டிய அங்கீகாரம், அவர் வாழ்ந்த காலத்திலேயே கிடைக்காத ஆதங்கமுண்டு.
"இதுகுறித்து அப்பாவிடம் பலமுறை கேட்டிருக்கிறோம். 'இந்த ஆண்டும்கூட உங்களுக்கு பத்ம விருது அறிவிக்கப்படலையேப்பா' என்று வருத்தப்படுவோம்.
"அவரோ, 'யாரும்மா அந்த பத்மா' என்று வெள்ளந்தியாகக் கேட்பார்.
"பத்ம விருதுகள் பற்றி விவரித்தால், 'மக்களுடைய அன்புதான் பெரிது. அது எனக்கு அளவுக்கு அதிகமாகவே கிடைத்துள்ளது' என்று சொல்லிச் சிரிப்பார்.
"அப்பாவின் மறைவுக்குப் பிறகு, ஒரே வாரத்தில் 'என்னுள்ளில் எம்.எஸ்.வி' என்ற இசை நிகழ்ச்சி நடத்தி அவருக்கு இளையராஜா அண்ணன் இசைஅஞ்சலி செலுத்தியதை மறக்கவே முடியாது," என்கிறார் லதா.

